தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்; ரூ. 3.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் மஹாலில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 69 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
தென்காசி வட்டத்திற்குட்பட்ட குத்துக்கல் வலசை கிராமம் அய்யாபுரம் ஊராட்சி தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் மஹாலில் 13.03.2023 இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது, நீங்களும் நலமா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பொது மக்களை சந்தித்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நீங்களும் நலமா திட்டம் மூலம் தொலைபேசி வாயிலாக அப்பகுதியில் உள்ள அமைச்சர் பெருமக்கள் கேட்டறிந்தார்கள். உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளுக்குச் சென்று இரு நாட்கள் அப்பகுதியில் தங்கி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி, மின்கம்பங்கள். மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் முறையாக கிடைக்கின்றனவா என்பதனையும் அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இது போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் மகளிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தைப் பொருத்தவரை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசினார். எனவே, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ஆணையினையும், 16 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.1,63,800 மதிப்பிலான தேய்ப்புப் பெட்டிகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.21,916 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வேளாண்மைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.217 மதிப்பிலான திரவ உயிர் உரம் மற்றும் மெட்டாரைசியம் உயிரியல் பூச்சிக் கொல்லி மருந்தினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ 40,000 மதிப்பிலான விதை மற்றும் கத்தரி குழித்தட்டு நாற்றுகளையும், குடிமைப் பொருள்கள் வழங்கும் அலுவலகம் சார்பில் 9 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், சமூக நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ. 25,500 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலைத் துறை வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, குழந்தை வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொது மக்கள் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷேக் அயூப், தென்காசி வட்டாட்சியர் பட்டமுத்து, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.