Home செய்திகள் தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; வைகோ அறிக்கை..

தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; வைகோ அறிக்கை..

by Abubakker Sithik

தேவர்குளம் காவல்நிலையப் பிரச்சினை குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல்நிலையத்திற்கு வழக்கு சம்மந்தமாக வரும் பொதுமக்களிடம் அங்கு பணியாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் அத்துமீறி நடந்து, இளைஞர்கள், மாணவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வந்துள்ளதாக தெரிய வருகின்றது. தேவர்குளம் காவல்நிலைய செயல்பாடுகளைக் கண்டித்து 08.05.2024 அன்று குறிப்பிட்ட ஒரு அமைப்பினர் காவல்நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன் ஒரு கட்டமாக வன்னிக்கோனேந்தல் சாலையில் திரண்டிருந்த வன்னிக்கோனேந்தல் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்ட பொதுமக்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தடியடி நடத்தி கைது செய்துள்ள காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவல்துறையினரின் செயலைக் கண்டித்து 09.05.2024 அன்று தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடையடைப்புப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். சுமார் 50 ஆண்டு காலமாக எனது அரசியல் பொதுவாழ்வுப் பயணத்தில் நான் நேரடியாக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் பகுதி என்பதால் இவ்வட்டார மக்களின் உணர்வுகளை நன்கு அறிவேன். காவல்துறை – பொதுமக்கள் மோதல் போக்கால் பன்னெடுங்காலமாக பாதிக்கப்பட்ட இப்பகுதியில் இதுபோன்ற மோதல் போக்கு நிகழாமல் முளையிலேயே கண்டறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சரிசெய்திட வேண்டும்.

தேவர்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களின் கடந்த கால அத்துமீறல்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்திட வேண்டும். எவ்வித முன்னறிப்பும் இன்றி தடியடி நடத்திய காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்குக் காரணமான காவல்துறையினரை உடனடியாக இடமாற்றம் செய்து, அப்பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலை தணிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். உண்மை நிலையை நன்கு அறிந்து அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!