கீழக்கரையில் குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு காய்ச்சல் – ஒழிக்க என்ன வழி ?

கீழக்கரை நகரில் டெங்கு காய்ச்சல் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. ஏராளமான பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரத்த அணுக்கள் இலட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனையில் 4 நாள்கள் தங்கி சிகிச்சை பெற ரூ.15000 முதல் ரூ.20000 வரை செலவாகிறது. இதுவே மதுரை என்றால் மருத்துவ செலவுகள் ரூ. 30000 ஐ தொட்டு விடுகிறது. இதனால் கீழக்கரை பகுதியின் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் படும் பாடு சொல்லி முடிக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி நாம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.

டெங்கு காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகிறது? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன ?

ஏ.டி.எஸ். கொசுக்கள் மூலம் டெங்கு வைரஸ் பரவுகிறது. டெங்கு வைரஸ் உள்ள கொசு கடித்தால் உடலில் நெறி கட்டும். கொசு கடித்த 4 முதல் 6 நாட்களில் காய்ச்சல் அறிகுறி தோன்றும்.

டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் எப்படி கண்டறிவது?

டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால் 103 முதல் 105 டிகிரி வரை காய்ச்சல் இருக்கும். கண்களை சுற்றி வலி, உடம்பு வலி அதிகமாக இருக்கும். வாந்தி வருவது போல் இருக்கும். வாந்தி எடுப்பர். 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் குறைந்து விடும்.

காய்ச்சல் வந்த பின் டெங்கு வைரஸ் போய்விடுமா?

டெங்கு வைரஸில் காய்ச்சல் குறைந்த பின்தான் 2-ம் கட்ட பிரச்சினை ஆரம்பிக்கும், திடீரென முக்கு, வாயில் இருந்து ரத்தம் வரும். குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மலம் கருப்பாக வெளியேறும். உடலில் ரத்தப் புள்ளிகள் தோன்றும். மூட்டு வலி எலும்பை நொறுக்கும் அளவுக்கு தசைவலி ஏற்படும். முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

ஒருமுறை வந்தால் மறுபடியும் வருமா?

டெங்கு காய்ச்சலில் 4 வகைகள் உண்டு. ஒரு வகை காய்ச்சல் வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும். ஆனால் பிற வகை காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மருத்துவ பரிசோதனையில் எப்படி கண்டறியலாம்?

உடலின் அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். எலிசா பரிசோதனை, ரத்த தட்டணுக்கள் குறைவை வைத்து கண்டறியலாம். டெங்கு மனிதர்களின் மூலம் பரவாது.

நல்ல உடல்நிலையில் உள்ளவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வருமா?

டெங்கு வைரஸ் கொசு யாரை கடித்தாலும் காய்ச்சல் வரும். ஒரு குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருந்தால் அந்த சமுதாயத்தில் 5 முதல் 7 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் இருக்கும்.

என்ன வகையான சிகிச்சை அளிப்பது?

டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டும். பெரும்பாலான வைரஸ் நோய்களுக்கு தனிப்பட்ட சிகிச்சை என்று இல்லை. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யாது. பாரசிட்டமால் மாத்திரை மட்டும் தான் கொடுக்க வேண்டும். ஆஸ்பிரின், ப்ரூபென் மாத்திரைகள் கொடுக்கக் கூடாது. ரத்த தட்டணுக்களை குறைக்கும் வகையிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. டாக்டர் ஆலோசனையின்படி நில வேம்பு கசாயம் தரலாம்.

வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடியுமா?

பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்கின்றனர். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். வயிற்றுப் போக்கிற்கு பயன்படுத்தும் ஓ.ஆர்.எஸ். பொடியை தண்ணீரில் கலக்கி குடிக்கத் தரலாம். போதுமான திரவ உணவை சாப்பிடுவது அவசியம்.

டெங்கு வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?

மழைநீர் மற்றும் தேங்கி இருக்கும் சுத்தமான நீரில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. வீடுகளில் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை முழுமையாக மூடி வைக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை பாத்திரங்களை நன்கு தேய்த்து கழுவினால் கொசு முட்டைகள் வெளியேறி விடும்.

பிரிட்ஜ், ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தால் கொசு புழுக்கள் இறந்து விடும். புகை மருந்து தெளிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்கலாம். டெங்கு கொசுக்கள் மிக நீண்ட தூரம் செல்வதில்லை. ஒரு வீட்டில் டெங்கு கொசு உற்பத்தி ஆனால் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவும். எனவே வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.