பத்திர பதிவுக்கு தடை நீடிப்பு – பொதுமக்கள் அவதி

விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நான்கு வாரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விளை நிலங்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளையும், விளை நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, பத்திரப்பதிவு சட்டத்தில், ‘22 அ’ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டுமனைகளாக விற்கப்பட உள்ள நிலங்களை, முறையாக வகைப்படுத்தி, அதில் எதை பதிவு செய்யலாம் என, அரசின் அங்கீகாரம் பெற்று, பட்டியல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலங்களை வகைப்படுத்தி அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பத்திரப் பதிவு சட்டத்தில், திருத்தம் கொண்டு வர, அரசு இதுவரை கொள்கை முடிவு எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அரசு தரப்பில், இதுதொடர்பாக, அரசின் 11 துறைகளிடம் கருத்து பெற வேண்டி இருப்பதால் நிலங்களை வகைப்படுத்தி விட்டோம். அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்காக கொள்கை முடிவு எடுக்க மேலும், நான்கு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த தடையால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அதை பத்திரப்பதிவு செய்யவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை, புதிய விதிமுறைகள் வகுக்கும்வரை தடையை நீக்க கூடாது என மனுதாரர் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் மார்ச் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதுவரை, பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.