Home செய்திகள் கடையநல்லூரில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு..

கடையநல்லூரில் மின் வாரிய களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு..

by Abubakker Sithik

கடையநல்லூர் உபகோட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வகுப்பு..

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி சார்பில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் உப கோட்டத்தில், பணிபுரியும் களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு கடையநல்லூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கடையநல்லூர் உப கோட்ட உதவி செயற்பொறியாளர், மாரியப்பன் பாதுகாப்பு வகுப்பினை தலைமை தாங்கி பேசுகையில், விநியோகத்தில் பணிகள் மேற்கொள்ளும் போதும், இயற்கை இடர்பாடுகளான சூறைக்காற்று, இடி, மின்னல் மற்றும் மழை, நேரங்களில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த வேண்டிய நில இணைப்பு சாதனம் (EARTH ROD), இடுப்புகயிறு (BELTROPE), கையுறை (GLOVES) ஆகிய பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள்‌ மற்றும் தன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்தும் பயணிக்கவும், பணிகளை மேற்கொள்ளும் முன் மின்னோட்டம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்த பின்பு பணிகள் மேற்கொள்ளவும், பணிகள் மேற்கொள்ளும் போது எக்காரணம் கொண்டும் கைபேசி எடுத்துப் பேசக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் சிந்தனை சிதறல் குறித்தும் முழுமையாக விளக்கிக் கூறினார். இந்த பாதுகாப்பு வகுப்பில் கடையநல்லூர் உப கோட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் நகர்ப்புறம் 1 மற்றும் 2, கடையநல்லூர் கிராமப்புறம், கடையநல்லூர் தெற்கு, நயினாரகரம், சேர்ந்தமரம் ஆகிய கட்டுமான பிரிவு மற்றும் உப மின் நிலையங்களை சார்ந்த உதவி மின் பொறியாளர்கள், ஆக்க முகவர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்கள், களப்பணி உதவியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பாதுகாப்புடன் பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com