Home செய்திகள் புதுச்சேரியில் இரும்பு தொழிற்சாலை அதிபரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர் 48 மணி நேரத்தில் கைது..

புதுச்சேரியில் இரும்பு தொழிற்சாலை அதிபரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர் 48 மணி நேரத்தில் கைது..

by ஆசிரியர்

புதுச்சேரியில் இரும்பு தொழிற்சாலை அதிபரிடம் ஆன்லைன் மூலம் இரும்புத்தாது விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தாவை சேர்ந்த ஷ்யாம் மைத்ரா என்பவர் கைது. அவரிடமிருந்து 1லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம்,7 பவுன் தங்கநகைகள், இரண்டு சொகுசு கார்கள் என 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரசாந்த் பன்சால் சில மாதங்களுக்கு முன்னர் இரும்புக்கு உண்டான தாது பொருட்கள் வேண்டும் என இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த ஷ்யாம் மைத்ரா (எ) போலோநாத் பிஸ்வாஸ் என்பவர் தான் இந்திய அரசால் நிறுவப்பட்ட இரும்பு தாது பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருப்பதாக கூறி தன்னை அறிமுகப்படுத்தி சந்தை விலையை விட 25 சதவிகிதம் குறைவான விலையில் இரும்பு தாது பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தனக்கு 200 டன் இரும்பு தாது பொருட்கள் வேண்டும் என பிரசாந்த் கேட்க அதற்கு விலையாக ரூ.58 லட்சத்து 23 ஆயிரம் விலை நிர்ணயித்துள்ளனர். முதற்கட்டமாக ரூ.28 லட்சத்தை பிரசாந்த் பன்சால்,ஷ்யாம் மைத்ராவின் வங்கி கணக்கில் செலுத்தி தாதுப்பொருள் வந்தவுடன் மீதமுள்ள பணத்தை  தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஷ்யாம் மைத்ரா,பிரசாந்த் பன்சாலிடம் தாது பொருட்களை அனுப்பியுள்ளதாகவும்,அது புதுச்சேரி எல்லைப்பகுதியில் கண்டெய்னர்கள் நிற்பதாவும் கூறி மீதமுள்ள பணத்தை கொடுத்தால் மட்டுமே தாது பொருட்கள் நிறுவனத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட ஆவணங்களையும் ஷ்யாம்  இணையதளம் மூலம் காண்பித்ததை நம்பிய பிரசாந்த் மீதி பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் இரும்பு தாது பொருட்களும் வரவில்லை. இது குறித்து பிரசாந்த், ஷ்யாம் மைத்ராவிடம் கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல் செல்போனும் அனைத்து வைத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாந்த் பன்சால்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். சிபிசிஐடி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால், உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜ்குமார், சிறப்பு அதிரடிப்படை காவலர் அருள்வேலன் ஆகியோர் கொல்கத்தா சென்று  சிபிசிஐடி போலீசார் உதவியுடன்  ஷ்யாம் மைத்ராவை கைது செய்தனர். விசாரணையில் ஷ்யாம் மைத்ரா நாடு முழுவதும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து 2 சொகுசு கார்கள், தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுகள் என மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவி பெயரில் இருந்த வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை போலீசார் கொல்கத்தாவிலிருந்து விமானம் மூலம் புதுச்சேரி கொண்டு வந்தனர். இந்த வழக்கில் புகார் கொடுத்த 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!