Home நகராட்சி சின்னக்கடை தெருவில் நகராட்சி சார்பாக ‘நீச்சல் குளம்’ – சாலை அமைக்காததால் சிறு மழைக்கே பொதுமக்கள் சிரமம்

சின்னக்கடை தெருவில் நகராட்சி சார்பாக ‘நீச்சல் குளம்’ – சாலை அமைக்காததால் சிறு மழைக்கே பொதுமக்கள் சிரமம்

by keelai

கீழக்கரை 12 வது வார்டு சின்னக்கடை தெரு நெய்னா முஹம்மது தண்டையல் தெருவிலிருந்து நடுத் தெரு செல்லும் சாலை போடும் பணிக்காக கடந்த நகர் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் ஏதும் இன்று வரை நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. இதனால் சிறு சாரல் மழை பெய்தாலும் கூட தண்ணீர் நிரம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது.

இதனால் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் முதியவர்களும், பள்ளி சிறுவர்களும், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த 12 வது வார்டு பகுதியில் நடந்த சாலை பணிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை சட்டப் போராளி மெஹ்மூது ரிபான் தகவல் அறியும் உரிமை சட்டம் – RTI வாயிலாக கேட்டு பதில்களை நகராட்சியிடம் இருந்து பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ”12 வது வார்டு பகுதியில் குறிப்பிட்ட சாலை பணிகள் நடை பெற்று கொண்டிருப்பதாக கடந்த 19.12.16 அன்று நகராட்சி ஆணையாளரின் ஒப்புதலோடு எனக்கு பதில் அனுப்பியுள்ளனர். அதில் நான் கேட்டிருந்த 4 வது கேள்விக்கு பதில் தந்திருக்கும் நகராட்சியினர் 12 வது பகுதியில் நடுத் தெருவையும், சின்னக்கடை தெருவையும் இணைக்கும் உட்புற சாலைகள், சிந்துபாத் சிறப்பு அங்காடி சமீபம் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு சாலை பணிகளும் நகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, நகராட்சி மண்டல அலுவலகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாக உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார்.

டெங்கும், மலேரியாவும் நீக்கமற நிறைந்திருக்கும் கீழக்கரை நகரில் நகராட்சி நிவாகத்தினர் முறையாக அவசர அவசியம் கருதி நடவடிக்கை எடுப்பார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்.. 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!