Home செய்திகள் தமிழகத்தின் பொதுக்கல்வித் துறையைப் பாதுகாக்கக் குரல்கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

தமிழகத்தின் பொதுக்கல்வித் துறையைப் பாதுகாக்கக் குரல்கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

by Askar

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் பொதுக்கல்வித் துறையைச் சீர்படுத்தப்பட வேண்டும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பொதுக்கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் சரிசெய்யப்பட வேண்டும், இதற்காக சமூகத்தில் ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்கள் தங்கள் மவுனத்தைக் கலைத்துக் குரல்கொடுக்க வேண்டும் என, தனது அறச்சீற்றத்தை முகநூல் பதிவாக வெளியிட்ட காரணத்திற்காகக்  கல்விச் செயற்பாட்டாளர் ஆசிரியை சு. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ‘இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என அடிமைகால ஆட்சியிலிருந்த அடக்குமுறை தான் நினைவுக்கு வருகின்றது. சமூகநீதி ஆட்சி எனக் கூறிக்கொள்ளும் ஆட்சியில், சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கக் கூட அனுமதி மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஆமாம் சாமி என எசப்பாட்டு மட்டுமே தங்கள் ஆட்சியில் கேட்க வேண்டும் என எண்ணுவது கூட கருத்துச் சுதந்திர அடக்குமுறைதான். தங்கள் அரசை நோக்கி வரும் குறைகளை, கோரிக்கைகளை உள்வாங்கி அதனைச் சரிசெய்வது தான் ஒரு மக்கள் நலன் அரசின் சரியான செயல்பாடாக இருக்க முடியும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளை நம்பித்தான் மக்கள் வாக்களித்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் மக்களிடத்திலிருந்து வெளிப்படும் எதிர்க்குரல்களை நசுக்குவது ஏற்புடையதல்ல. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாட்டைக் களைதல், சம வேலைக்குச் சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன போன்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுக் கல்வித்துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை வெறும் ஆசிரியர்கள் சார்ந்தது மட்டும் கிடையாது. அவர்கள் உருவாக்கும் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்தது. பொதுக் கல்வியை மேம்படுத்தத் திட்டங்கள் மட்டும் போதாது, அந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்த ஊழியர்கள், ஊழியர்களுக்கான ஊதியங்கள் ஆகியவற்றையும் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்துகொண்டிருக்கிறது. பொதுக் கல்வியின் மூலமாகவே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. பொதுக்கல்வித் துறை தான் 80 சதவீத தமிழக மாணவர்களின் ஆணிவேராக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் பொதுக்கல்வித் துறையின் நிலை மிக மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊதியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் ஊதியத்திற்காகவும், பணி நிரந்தரத்திற்காகவும் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறபோது, அங்குப் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கேள்விக்குள்ளாகும் சூழல் ஏற்படுகின்றது.  இதன்மூலம் அரசுக் கல்விப் பணியாளர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்தே வஞ்சிக்கிறது. இதைத் தான் தனது அறச்சீற்றம் கொண்டு ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்கள் முகநூல் பதிவாக வெளியிட்டுள்ளார். இலக்கிய விழாக்கள் , புத்தக விழாக்கள் என்று இந்த அரசு ஆரம்பிக்கும் விழாக்கள் குறித்து பெருமிதம் பேசும் ஆளுமைமிக்க இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும், சீரழிந்து வரும் அரசின் பொதுக் கல்வித்துறை குறித்துப் பேசாமல் இருக்கிறார்கள். முகநூலில் இயங்கும் ஏராளமான எழுத்தாளர்கள் ஆசிரியர்களாக இருக்கின்றனர். ஆசிரியர்களாக இருந்து எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்குக் கூடுதல் சமூக அக்கறை இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் பெரும்பாலும், இந்த சமூகத்தில் காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் ஆவர். அவர்கள் வாழ்வு மலர்ந்தால் தான் செழிப்பான சமூகம் உருவாகும். மற்ற காரணிகள் கடந்து, சமூகத்தின் ஆணிவேராக இருக்கும் கல்விச் சூழலை அவர்கள் கவனப்படுத்த வேண்டும். ஆனால், ஏனோ அவர்கள் மறுக்கின்றனர்? அல்லது கடந்து போகின்றனர்? என்று ஆசிரியர் சு. உமா மகேஸ்வரி அவர்கள் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் அறச்சீற்றம் நியாயமானதே.  இதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்தது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஆகவே, ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்கத்தைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, பொதுக்கல்வித் துறை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, விளிம்புநிலை மக்களின் கல்வி ஆதாரமாக இருந்து கொண்டிருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!