Home செய்திகள் மணிமுத்தாறு வனப்பகுதியில் விதைப்பந்துகள் விதைக்கும் பசுமைப்பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

மணிமுத்தாறு வனப்பகுதியில் விதைப்பந்துகள் விதைக்கும் பசுமைப்பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by ஆசிரியர்

மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை வரையிலான வனப்பகுதியில் லட்சக்கணக்கான விதைப்பந்துகளை விதைக்கும் பசுமை பணி நடந்தது. இந்த பணியில் பள்ளி மாணவ மாணவிகள், போலீஸ் பட்டாலியன்கள், சமூக ஆர்வர்கள் என அனைவரும் பங்கேற்றனர். மணிமுத்தாறு சிறப்பு காவல் பிரிவு ஒன்பதாவது போலீஸ் பட்டாலியன், பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், முக்கூடல் அசிதி பல் மருத்துவமனை, காந்திய அமைப்பு, வனத்துறையினர் இணைந்து மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை வரையிலான வனப்பகுதியில் லட்சக்கணக்கான விதைப்பந்துகளை வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மணிமுத்தாறு பட்டாலியன் கமாண்டன்ட் டி. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். காந்தியவாதி செங்கோட்டை ராம்மோகன், பெண் உலகம் சாந்தி, முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், மதுரை பாலு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பாரம்பரியமிக்க பாளை இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட் சகோதரி வசந்தி மேரி பிருந்தா கலந்து கொண்டார். விதைகள் மரங்களாகும் பசுமை நிகழ்வை சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் துவக்கி வைத்து பேசினார். இக்னேஷியஸ் பள்ளி மாணவியர் மற்றும் என்.சி.சி பிரிவினர் 2 லட்சம் விதைப்பந்துகளை கடந்த மாதம் செய்து சாதனை நிகழ்த்தியது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு சிற்றுந்துகளில் இந்த இரண்டு லட்சம் விதைப்பந்துகளை மணிமுத்தாறு பட்டாலியன் பகுதிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அந்த விதைப்பந்துகளை மாணவியர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியன் இணைந்து வனப்பகுதியில் தூவினர்.

மணிமுத்தாறு மாஞ்சோலை இடையிலான செக் போஸ்ட் பகுதியில் கமாண்டண்ட் கார்த்திகேயன் தலைமையில் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவர் முருகேசன், பாலமுருகன், இக்னேஷியஸ் என்சிசி ஆசிரியை செல்வி மற்றும் ஆசிரியர்கள் மரிய பிரின்சி, சுப்புலட்சுமி, பட்டாலியன் துணை கமாண்டட் தீபா, உதவி கமாண்ட் சம்பத், ஸ்ரீதேவி ஆகியோருடன் மாணவிகள், பட்டாலியன் காவலர்கள், விதைப் பந்துகளை வீச துவங்கினர். கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த பசுமை பணியை வியப்புடன் பார்த்தனர். மலை மற்றும் வனம் சார்ந்த பகுதியில் மரங்களை அதிகரித்து மழை பொழிய வைத்தால் தாமிரபரணி மூலம் சுமார் 7 மாவட்டங்களுக்கு பாசனம் அதிகரித்து விவசாயியும், விவசாயமும் வாழும் என கார்த்திகேயன் பேசினார். ஒரு கோடி மரம் கலாம் பெயரில் நாடெங்கும் மாணவ மாணவியரைக் கொண்டு நடப்பட தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேசி வரும் சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன், இதுவரை 15 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளது எனவும், பள்ளி மாணவியரால் இதுவரை ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஒரு மண் உருண்டையில் நான்கு முதல் ஐந்து விதைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இக்னேஷியஸ் எஸ்.வசந்தி மேரி, பல் மருத்துவர் ஏகலைவன், காந்தியவாதி ராம் மோகன், கமாண்டன்ட் கார்த்திகேயன், சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். என்சிசி. சார்ஜன்ட் இக்னேஷியஸ் தீக்ஷனா பாராட்டப்பட்டார். “ஞானதந்தை கலாம் விருது” ஒன்பதாவது பட்டாலியனுக்கு வழங்கப்பட்டது.

பொதுமக்கள் காவலர்கள் நல்லுறவு என பொதுவாக பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால் பொதுமக்கள் மாணவ மாணவியர், சமூக நல ஆர்வலர்கள், காவலர்களோடு இணைந்து பசுமை பணியை செய்தது தமிழகம் முழுவதுமே இது ஒரு பாடமாக அமையும் என பேசப்பட்டது. மழை இல்லை, மரங்கள் இல்லை, எல்லாமே மருவி வருகின்றன என்று பேசப்படுவது முற்றுப்பெற வேண்டுமானால் தமிழகத்தில் உள்ள ஆரம்ப, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் இதில் பயிலக்கூடிய மாணவ மாணவியரை தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், அரசாங்கம் முறைப்படி பயன்படுத்தினால் 2024 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நம்மால் வைத்து விட முடியும் என சமூக ஆர்வலர் பூ. திருமாறன் தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!