சாத்தியாறு அணை . பருவ மழை சரியாக பெய்யாததால் இந்த அணை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்து வருவதால் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிறுமலை தொடர்ச்சி, மஞ்சமலை ஓடைப் பகுதி மற்றும் வகுத்துமலைகளில் தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்த அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் இந்த அணைப்பகுதிகளில் 13 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.நேற்றைய நிலவரப்படி அணையில் சுமார் 16 அடி வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 29 அடியாகும். இந்த அணையின் மூலம் கீழச்சின்னம்பட்டி, அய்யூர், எர்ரம்பட்டி, முடுவார்பட்டி உள்பட 10 கிராம கண்மாய்களில் நீர் நிரம்பும். இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.தொடர் மழை பெய்து அணை முழுமையாக நிரம்பும் என்று இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். மேலும் அணையின் நீர்வரத்து மற்றும் அணை பகுதிகளை மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பில் அணையின் உதவிப் பொறியாளர் போஸ் மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் இப்பகுதி பாசன விவசாயிகளும் சாத்தியாறு அணைக்கு வரக்கூடிய நீர் வரத்தை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்