சிறுவனை தாக்கிய ஸ்கேட்டிங் பயிற்சியாளர்: கைது செய்த போலீசார்..
மதுரை, சின்ன சொக்கிக்குளம், காமராஜர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகீர்த்தனா (35). இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த, 12ம் தேதி மாலை எனது மகன் ரக்ஸன் பிரணவை, அழைத்து கொண்டு வண்டியூர் தேவர்நகர் அருகே உள்ள ஸ்கேட்டிங் வகுப்பிற்கு சென்றேன். மகனை வகுப்பில் விட்டுவிட்டு, நானும் எனது, மகளும் காரில் இருந்தோம். மாலை, 5:15 மணியளவில் எனது மகன் தானாக தலையை முட்டிக் கொண்டதில், லேசான காயம் ஏற்பட்டதாக கூறி, அங்கு ஸ்கேட்டிங் பயிற்சியாளராக பணிபுரியும் உதயகுமார் (21) என்பவர் என்னிடம் வந்து கூறினார்.
நான், பதறிச் சென்று பார்த்தபோது எனது மகன் ரக்ஸன் வலியால் துடித்து கொண்டிருந்தான். அவனது, முகத்தில் வீக்கம் மற்றும் இரு பக்கங்களிலும் கைத்தடம் பதிந்த காயம் இருந்தது பற்றி, உதயகுமாரிடம் கேட்டபோது, ரக்ஸன் கோவத்துடன் தங்களை தாக்க முயன்றதாகவும், அதனால் அவனை, போர்வையில் சுற்றி இருட்டு அறையில் அடைத்து வைத்ததாகவும் கூறினார்.
அதேநேரம், என் மகனிடம் கேட்டபோது, இருட்டறையில் அடைத்து வைத்தபோது, தன்னை விடுவிக்குமாறு கேட்டும், அதை கண்டுகொள்ளாமல் உதயகுமார் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதால், காயம் ஏற்பட்டதாக ரக்ஸன் கூறினான். இதையடுத்து, ரக்ஸனை தாக்கியது பற்றி, உதயகுமாரிடம் நான் கேட்டபோது அவர் என்னை தகாத வார்த்தைகளில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு பதிந்த, அண்ணா நகர் போலீசார் ஸ்கேட்டிங் பயிற்சியாளரான ராமநாதபுரம், பரமக்குடி, சத்திரக்குடி, அண்ணாநகர் காலனியைச் சேர்ந்த உதயகுமார் (21) என்பவரை கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.