Home செய்திகள் குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

குழந்தை திருமணம் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 வருடம் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் அபராதம்; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்பு உடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை, ரூ. 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணும் செய்யும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணம் செய்யப்படுவதால் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வு, உடல் நலம், கல்வி ஆகியவை கிடைக்காமல் குழந்தைகளின் முன்னேற்றம் தடைபட பெரிதும் வாய்ப்பாக அமைகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அவர்களின் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து அரசு துறைகள் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக மாவட்ட சமூக நல அலுவலர் செயல்பட்டு வருகிறார். மேலும் ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், விரிவாக்க மற்றும் ஊர் நல அலுவலர்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு, பெண் வார்டு உறுப்பினர் ஆகியோர்களை கொண்டு குழந்தை திருமண தடுப்பு மைய குழு ஒவ்வொரு ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகின்றது.

குறிப்பாக குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.1 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். எனவே திருமணம் நடத்தி வைக்கும் மதகுருமார்கள் (அர்ச்சகர்கள், பாதிரியார்கள், இமாம்) மற்றும் சேவை வழங்குபவர்களான அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப மேலாளர்கள், உணவளிப்பவர்கள், இசைக்குழுக்கள் மற்றும் திருமண நிகழ்வில் ஈடுபட்டுள்ள இதர சேவை வழங்குபவர்கள் மணமக்களின் வயதினை உறுதி செய்து திருமண நிகழ்வில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை 1098, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!