மக்கள் நல பாதுகாப்புக் கழகம் – கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி அறிவிப்பு

கல்வி நகரமாக திகழும் கீழக்கரை நகரில் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

ஆனால் அரசு வேலைவாய்ப்புகளை பயன்படுத்தும் முயற்சிகளை எவரும் செய்வதில்லை. பலருக்கு அரசு துறை தேர்வுகள் குறித்தோ, அரசு வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவோ கொஞ்சமும் புரிதல் இல்லை. இந்நிலையில் அரசு துறை தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை மக்கள் களம் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் தலைவர். A.M.S  தமீமுதீன் கூறியதாவது நமது கீழக்கரை நகர் கல்வி மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நகராகும். கீழக்கரையை சேர்ந்த செல்வந்தர்களால் தமிழகத்தில் எண்ணற்ற கல்வி ஸ்தாபனங்கள் சிறப்புடன் நடைபெற்று கொண்டு இருக்கின்றது. கீழக்கரையை சேர்ந்த எண்ணற்ற கல்வியாளர்கள் இலக்கண, இலக்கிய, சரித்திர நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு புத்தங்களை வடிவமைத்து உலக அளவில் புகழ்பெற்று உள்ளார்கள்.

கீழக்கரையை சேர்ந்த மாணவ,மாணவிகளின் கல்வியை மேம்படுத்தவும், அரசு தேர்வு எழுத செய்து கீழக்கரையை சேர்ந்த மாணவ,மாணவிகளை அரசின் உயர் பதவிகளில் பணியாற்ற செய்ய மக்கள் நல பாதுகாப்புக் கழகம் முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதன் முன்னோட்டமாக இந்த கட்டுரை போட்டியை மக்கள் நல பாதுகாப்புக் கழகமும், கீழக்கரை மக்கள் களமும் இனணந்து நடத்த இருப்பதாக கூறினார்.

மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் கூறுகையில் ”கீழக்கரையை சேர்ந்த மாணவ,மாணவிகளை IAS, IPS போன்ற அரசின் உயர் பதவிகளுக்கு உருவாக்குவது எங்கள் கழகத்தின் லட்சியங்களில் ஒன்று ஆகும். கட்டுரை போட்டிகளின் மூலம் IAS, IPS மற்றும் அரசு தேர்வுகள் சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, இது போன்ற அரசு தேர்வுகளை எழுத ஆர்வத்தை அதிகரிக்க செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

கட்டுரை போட்டியின் தலைப்பு, பரிசுதொகை, தேதி மற்றும் விதிமுறைகள் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.” என்றார். மேலும் இந்த போட்டியில் கீழக்கரை நகர் பகுதியில் படிக்கும் தொடக்க நிலை முதல் இந்த வருடம் மேல் நிலை தேர்வு எழுதும் மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த வருடம் அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தேர்வு எழுத ஆர்வமாக இருக்கும் மாணவ,மாணவிகள் எங்களை தொடர்பு கொண்டால் இதற்குறிய ஆலோசனை, வழிமுறைகளை வழிகாட்டுதல்களை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

கீழக்கரை மக்கள் களத்தின் செயலாளர் முஸம்மில் கூறுகையில் ”கீழக்கரை சேர்ந்தவர்கள் மார்க்க கல்வியிலும், உலக கல்வியிலும் சிறந்து விளங்கியவர்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இப்பகுதி மாணக்களை மேலும் அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க இப்படிப்பட்ட கல்வி சம்பந்தமான ஆக்கபூர்வமாக போட்டிகள் உறுதுனையாக இருக்கும்.

எதிர்காலங்களில் சமூக அமைப்புகள் இப்படி ஆக்கபூர்வமான வழிமுறைகள் மூலம் மாணக்கர்களின் கல்வி மேம்பட முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.