திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ரத்த தான செயலி மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே கீழ் வரும் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மெயின் மெனு :

இதன் மெயின் மெனு பக்கத்தில் ரத்தம் கொடுக்க விரும்புபவர்களுக்கான முன்பதிவு, ரத்தம் வழங்குபவர்களின் பட்டியல், ரத்தம் தேவைப்பட்டால் கேட்க, ரத்த தானம் குறித்த பொதுவான தகவல்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

ரத்த தானம் வழங்க விரும்புவோர் :

ரத்த தானம் வழங்க விரும்புவோர் தங்களின் தகவல்களை முன்பதிவுப் பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பெயர், தொலைபேசி எண், ரத்த வகை, ஈமெயில், முகவரி, கடைசியாக ரத்த தானம் செய்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கொடையாளர்கள் பட்டியல் :

கொடையாளர்கள் பட்டியலில் அவர்களின் பெயர், ரத்த வகை, தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அழைப்பு பொத்தானும், பகிர்தல் பொத்தானும் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கொடையாளர்களை அழைக்கவோ, அவர்களின் எண்களை நண்பர்களுடன் பகிரவோ செய்யலாம்.

ரத்தம் தேவைப்படுவோர் :

ரத்தம் தேவைப்படுவோர், எந்த ரத்த வகை வேண்டும், எந்த மருத்துவமனை, இடம், தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். இதைத்தவிர ரத்த தானம் குறித்த முக்கியமான தகவல்களும், புள்ளிவிவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகம் கேட்கப்படும் வினாக்கள் :

அதிகம் கேட்கப்படும் வினாக்கள் பகுதியில் ரத்த தானம் எவ்வளவு முக்கியமானது? ஏன் ரத்த தானம் செய்ய வேண்டும்? எதனால் ரத்த தானத்துக்கு 2 மாத இடைவெளி உள்ளிட்ட தகவல்கள் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியவை.