கீழக்கரை சாலைகளில் ‘ஹாயாக’ உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, செக்கடி மார்க்கெட் பகுதி, முஸ்லீம் பஜார் லெப்பை ஹோட்டல் பகுதி, புதிய பேருந்து நிலையம், சேரான் தெரு, நடுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சர்வ சுதந்திரமாக மாடுகள் ‘ஹாயாக’ சுற்றித் திரிகின்றன. கீழக்கரை சாலைகளில் மக்களோடு மக்களாக மாடுகளும் வலம் வருகிறது. இவைகள் கீழக்கரை குப்பை மேடுகளில் கிடைக்கும் கழிவு பொருள்களையும், பிளாஸ்டிக் பைகளையும், சாலைகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் முன் போடும் இலைகளையும், தின்றுவிட்டு சாலைகளில் படுத்து கிடக்கின்றன.

இதனால் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையை கடப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். மாடுகளின் உரிமையாளர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே, மாடுகளை கட்டி வைத்து, அதன்பின்னர் சாலையில் உலாவ விடுகின்றனர். மாடுகளுக்கான தீவனங்கள் அதிக விலைக்கு விற்பதால், உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் உலவ விடுகின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மாடுகளின் உரிமையாளர்கள், அவைகளை வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும் என கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் போக்குவரத்திற்கு இடையூராக திரியும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து சென்று, அதன் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..