Home செய்திகள் நெல்லையில் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

நெல்லையில் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

by mohan

நெல்லையில் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “உயர்ந்த இலக்கே உயர்ந்த இடத்தை பெற்றுத் தரும்” என்ற உயரிய சிந்தனையை தனது உரையின் மூலம் பதிவு செய்தார். திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை, வேலை வாய்ப்புத்துறை, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி இந்து தமிழ்த் திசையுடன் இணைந்து இளம் தலை முறையினருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை 29.12.2021 காலை 11.30 மணியளவில் நடத்தின. இதில் அரபுத்துறைப் பேராசிரியர் எம்.அப்பாஸ் அலி இறை வாழ்த்து பாடினார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹம்மது சாதிக் தலைமை உரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பொறியாளர் எல்.கே.எம்.முஹம்மது நவாப் ஹீசைன், மதிதா இந்துக் கல்லூரி முன்னாள் வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன், இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சே.சேக் சிந்தா, வேலைவாய்ப்புத்துறை பேராசிரியர் ப்ரியா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மு.ரா.மஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி ஜெய்லானி மதார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாகிர் உசேன் அறிமுகவுரையாற்றினார். இந்த விழாவில், திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது, சாதிக்க வேண்டும் என்று மனது நினைத்து விட்டால் நிச்சயம் சாதிப்போம். நம்மால் பேசமுடியாது, சிறப்பாகச் செயல்பட முடியாது என்று நினைத்தால் யார் ஊக்கப்படுத்தினாலும் முடியாது. சுய ஊக்கம் வெற்றிக்கு இட்டுச் செல்லும். மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் நால்வரும் நம் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கிறார்கள். நம் தந்தை தாய், ஆசிரியர் அறிவுரை நம்மைச் சிறப்பான மனிதனாக மாற்றும். இறைவன் மட்டுமே மிகப் பெரியவன் என நினைத்தால் தினமும் வழிபாட்டோடு இறைவன் மீது பாரத்தைப் போட்டு நம் செயலை நாம் தொடங்குவோம். முன்பெல்லாம் வேலை தேடி நாம் செல்ல வேண்டும். இப்போது ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் நம்மை நோக்கி வருகின்றன.வளாக நேர்காணல்கள் நம்மை நோக்கி வருகின்றன. நீங்கள் நினைப்பது போல் ஒரு மாவட்டத்திற்கு ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தாலும், தலைமைச் செயலகம் சென்றால் ஒரு துறைக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைப் பார்க்கலாம். அத்தேர்வு எழுதத் தகுதி ஏதேனும் ஒரு பட்டம் தான். இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்றாகப் பயில வேண்டும். பட்டம் பெற்றபின் வேலைக்கு முயலலாம் என்கிற எண்ணத்தை விட்டு உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும். பெரிய மீனைப் பிடிக்கக் கிளம்பினால் தான் சிறிய மீனாவது பிடிக்கலாம். உயர்ந்த இலக்கு உயர்ந்த இடத்தை உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்கள் வாழ்வு உங்கள் கையில் என்று எண்ணுங்கள், சூழ்நிலைகளை உறுதியோடு எதிர்கொள்ளுங்கள். நல்ல பழக்கங்கள் வழக்கங்கள் நம்மை மேம்படுத்தும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்வில் நோக்கமாய் இருக்கக்கூடாது. உயர் கல்வியும் உயர்ந்த ஒழுக்கமும் நம்மை எப்போதும் உயர்த்தும்” என்று பேசினார். தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் அ.மு அயூப்கான் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து தமிழ்த் திசை, கல்லூரித் தமிழ்த் துறை, வேலை வாய்ப்புத் துறை, சிவராஜவேல் ஐ.ஏ.எஸ்.அகாடமி ஆகியன இணைந்து செய்திருந்தன.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!