Home செய்திகள் நேரு நினைவுக் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

நேரு நினைவுக் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

by mohan

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா மூக்கப்பிள்ளை கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா.பொன்பெரியசாமி தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கினார். கல்லூரிக்குழுத்தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது வாழ்த்துரையில் மாணவர்கள்தான் எதிர்கால தேசத்தை வழிநடத்தக் கூடியவர்கள் அவர்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்த கொள்கைகளைக் கடைபிடிக்க உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். இன்றைக்கு நேர்மைப் பண்பு குறைந்து நம் சமுதாயம் ஊழலின் எல்லையில் நிற்கிறது. எதிர்காலத்தில் இது நேரெதிராக மாறி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இன்று ஏற்படுள்ளது. அறவழியில் நடப்பதற்கு இலக்கியங்களே துணை நிற்கும். எனவே, அனைவரும் இலக்கியம் படியுங்கள் என்றார். விழாவில் கவிஞர் நந்தலாலா அவர்கள் கலந்துகொண்டு அகப்பொறியின் திறவுகோல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இன்றைக்கு நாம் மொழிப்பற்று அற்றவர்களாக மாறி வருகிறோம். கீழடி அகழாய்வில் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் எழுத்துகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இன்று வரை தமிழ் வாழ்கிறதென்றால் அதற்குக் காரணம் கற்றவர்களைவிட, தமிழிலிலேயே எப்போதும் பேசுகிற விவசாயிகள்தாம். அவர்கள்தாம் தமிழைக் காத்து எடுத்துவந்தவர்கள் . திருவள்ளுவர் முதலான படைப்பாளிகள் தமிழை உலக அரங்கிற்குக் கொண்டுசேர்த்தனர் என்றார். காந்தியடிகளின் வாழ்விலிருந்து பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டி காந்தி தன் அன்புவழி ஒன்றினாலேயே விடுதலை இந்தியா சிதறிப் போய்விடாமல் முழுமையான இந்தியாவாகக் கிடைத்திட வழி வகுத்து இந்தியாவைக் காத்துத் தந்தார். அவர் குறிப்பிட்ட தீண்டாமை உணர்வை முற்றிலுமாக விட்டொழித்தல், மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்தல், மது அருந்தாதிருத்தல், பெண்ணை அடிமைப்படுத்தாதிருத்தல் முதலான பண்புகளைக் கொண்டவர்களாகத் திகழ்ந்து நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும் என்றார். மாணவர்கள் தம் எதிர்கால இலக்கில் மன உறுதியோடு இருக்கவேண்டும். மன உறுதியே வெற்றியைத் தரும் என்றார். விழாவில், துணை முதல்வர் முனைவர் எஸ்.குமாரராமன் பெற்றோர் சங்கத் தலைவர் திரு. அ.இராமதாசு கலந்து கொண்டனர். முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சோம.இராசேந்திரன் வரவேற்புரை வழங்கினார். மாணவ இலக்கிய மன்றச் செயலர் மனோரஞ்சித் நன்றி கூறினார்.

செய்தி:இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!