தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்தில் ரூ.12 கோடியே 34 இலட்சம் செலவில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் புதிய மருத்துவ உபகரண மையங்களை திறந்து வைத்து ரூ.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க 28.02.2024 அன்று தென்காசி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவ மனை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சி.டி.ஸ்கேன் மையம், ஒலி புகா அறை, செங்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த சேமிப்பு அலகு, வல்லம் மற்றும் சங்கரன்கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட மக்களின் மருத்துவ தேவைகளை கவனத்தில் கொண்டு பல்வேறு புதிய கட்டடங்கள், மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளை மக்கள் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வதற்காக மருத்துவ மையங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில், இன்றைய தினம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.8 கோடியே 25 இலட்சம் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 47 இலட்சம் செலவில் சி.டி.ஸ்கேன் மையம், சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் ரூ.12 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒலிபுகா அறை, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இரத்த சேமிப்பு அலகு, வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடம், சங்கரன்கோவிலில் ரூ.75 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவ மனையில் வெளி நோயாளிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 1283-1350 பேரும், உள் நோயாளிகளாக தினமும் சுமார் 88-100 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் உள்நோயாளிகளாக சுமார் 480-510 பேர் வரை வருகிறார்கள். பிரசவங்கள் மாதம் ஒன்றுக்கு 289-300 பேர் வரை மருத்துவ சேவையினை பெறுகின்றனர். ஆய்வக பரிசோதனைகள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 51034 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவம் திட்டத்தின் மூலம் 24.02.2024 வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையங்களில் 66075 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 12019 நபர்கள் என மொத்தம் 78094 நபர்கள் பயனடைந்துள்ளார்கள்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள காந்த அதிர்வலை வரைவு (எம்.ஆர்.ஐ) உதவியுடன் மூளை, தண்டுவடம் பகுதிகளில் ஏற்படும் நோய்களின் தன்மையை கண்டறிய முடியும். மூளையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதன் மூலம் மூளை கட்டி, பக்கவாதம், தலையில் காயம், மூளையின் விரிவாக்கப்பட்ட அல்லது சேதமடைந்த இரத்த நாளங்கள், முதுகு தண்டு காயம், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் ஆகியவை கண்டறியப்படுகிறது. இதயத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பதன் மூலம் பிறவி அசாதாரணங்கள், இதய இரத்த நாளங்கள் அடைப்பு, சேதமடைந்த தசைகள், இதய வால்வு கோளாறு ஆகியவை கண்டறியப்படுகிறது. முதுகு தண்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் புற்று நோய், எலும்பு கட்டி, குடலிறக்கம், எலும்பு மூட்டு சேதம் தொற்று, நரம்பு பாதிப்பு காரணமாக குறைந்த முதுகு வலி ஆகியவை கண்டறியப்படுகிறது. மேலும், ரூ.33.40 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெரிய பிள்ளைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம், பாவூர்சத்திரம் சமுதாய சுகாதார நிலையம், சங்கரன் கோவில் அரசு மருத்துவமனை மற்றும் குருக்கள் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் சிறப்பான மருத்துவ சேவையினால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படும் நிலை பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், 10 பயனாளிகளுக்கு தாய்சேய் நல பெட்டகங்களையும், கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும், 5 தொழு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் உபகரணங்களையும், 6 பயனாளிகளுக்கு காது கேட்க உதவும் கருவிகளையும், 90 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.7 கோடியே 68 இலட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் வங்கி இணைப்பு கடனுதவிகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு. சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், கூடுதல் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.சோமசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஷேக் அப்துல்லா (தென்காசி), திவ்யா மணிகண்டன் (ஆலங்குளம்) லாலா சங்கர பாண்டியன் (சங்கரன்கோவில்), மகளிர் திட்ட இயக்குநர் ரா.மதி இந்திரா பிரியதர்ஷினி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பொ.பிரேமலதா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் மரு.ஏ.கமலவாசன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வி.கோவிந்தன், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆர். ஜெஸ்லின், செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்புத்துறை, அனிதா சாந்தி. உதவி செயற்பொறியாளர்கள் ஜான் ஆஷிர், இப்ராஹிம், உதயகுமார், செல்வி. செல்வசுபா, உதவி பொறியாளர் செல்வி.ராளி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.