Home செய்திகள் கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் மீது புகார்..

கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சவுக்கு சங்கர் மீது புகார்..

by syed abdulla

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கள்ளக்குறிச்சியில் உயிர் இழந்த பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், சென்னையில் இதுவரை மூன்று வழக்குகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இவர் மீது வழக்குகள் குவிந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை காவல்துறை இவர் மீது குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருக்கிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பின்போது யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறான கருத்துக்கள் பேசியதாகவும் அதனால் சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஸ்ரீமதியின் தாய் செல்வி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்துள்ளதாகவும், தனது மகள் பள்ளிக்கூடத்தில் கொலை செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.

அந்தப்பள்ளியில் வெளிநாட்டு ஆணுறைகள் இருந்ததாகவும் தனது மகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது வரை போக்சோ வழக்கு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில்  சவுக்கு சங்கர் என்பவர் தன் மகள் மீது அபாண்ட பழி சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி நிறுவன நிர்வாகிகள் சாந்தி, சிவசங்கரன், ரவிக்குமார் ஆகியோரிடம் யூடியூபர் சங்கர் பணம் வாங்கிக்கொண்டு தன் மகள் குறித்து அவதூறு பரப்பியதாகவும், தனது மகள் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்ததாகவும் அதற்கு தான் சாதி பார்த்து பிரச்சனை செய்ததாகவும் சங்கர் அவதூறு பரப்பியுள்ளார் எனவும் தெரிவித்தார். இவ்வாறு தனது மகள் மீது அபாண்டமாக பழி சுமத்தி அவதூறு கருத்துக்கள் தெரிவித்த யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமதியின் தாய் செல்வியை தொடர்ந்து, அவரது வழக்கறிஞர் மோகன் பேசுகையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!