Home செய்திகள்மாநில செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -25

(கி.பி 750-1258)

துருக்கிஸ்தான், சீனா இவைகளுக்கு இடைப்பட்ட மங்கோலியா என்னும் பகுதியில் இருந்த மக்களில் இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்தன.

இயற்கையாவே முரட்டு சுபாவமும், போர் வெறியும், மனிதநேயமும் இல்லாத ஒரு கும்பலாக இந்த மங்கோலியர்கள் என்னும் தாத்தாரியர்கள் விளங்கினார்கள்.

செங்கிஸ்கான் என்னும் வீரர் இந்த வீரர்களை ஒன்று திரட்டி ஒரு படையாக கட்டமைத்து முழு சீனாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

பிறகு மத்திய ஆசியப்பகுதிகள் குராசான்,புகாரா, நைஸாப்பூர், சாமர்கந்து, குவாரிஜிமி, மெர்வ்,ஹீரத்,திர்மிதிஎன எல்லா நகரங்களையும் மங்கோலியர்கள் கபளீகரம் செய்தார்கள்.

மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்கள். வீடுகளை, சொத்துக்களை அழித்தார்கள். நூலகங்களை எரித்து விலைமதிப்பற்ற புத்தகங்களை தீக்கிரை ஆக்கினார்கள்.

செங்கிஸ்கானுக்கு பிறகு மகன் ஒக்தாயிகான், போரில் ஈடுபட்டார்

செங்கிஸ்கான் பேரர் ஹுலாகு கான் மற்றும் சீனத்தளபதி குவோகான் ஆகியோரின் படை அப்பாஸிய பேரரசின் தலைநகரான பாக்தாத்தை வந்தடைந்து மக்களை கொன்று குவித்தது.

பாக்தாத்தின் ரோடுகளில் பிணங்கள் குவிந்து கிடந்தன. கணுக்கால் அளவு ரத்தம் ரோடுகளில் ஓடியதாக குறிப்பிடப்படுகிறது.

பாக்தாத்தின் புகழ்பெற்ற நூலகம் எரிக்கப்பட்டது. அதிலிருந்து ஏராளமான நூல்களை ஓடும் நதியில் தூக்கி எறிந்தனர்.

தீவைத்து கொளுத்தினர். அதுவரை அறிவின் பொக்கிசங்களாக இருந்த ஏராளமான நூல்கள் அழிந்து போயின. வரலாறு,மதம்,கலை, அறிவியல்,கணிதம் என அறிவுப் பொக்கிசங்கள் இல்லாமல் ஆயின.

மிருகங்களைபோல குரூரமாக நடந்து கொண்டனர் மங்கோலிய வீரர்கள்.

அப்பாஸிய பேரரசர் அல்முஹ்தசிம் பில்லா அவர்களை தங்கமும்,வெள்ளியும், விலையுயர்ந்த பலவகை கற்களும், கொட்டிக் கிடந்த கருவூலத்திற்கு அழைத்து சென்று இதனை உண்ணுங்கள் என்று ஒருவாரம் காலம் உணவே கொடுக்காமல் பட்டினி போட்டனர்.

ஒரு கம்பளத்தில் சுற்றி குதிரையை உதைக்கவைத்தே கொன்றனர்.

அப்பாஸிய கலீபா தெய்வத்திற்கு சமமானவர் என்றும் அவரை கையில் கொன்றால் தெய்வ குத்தம் என்றும், குதிரையை மிதிக்க வைத்தே கொன்றனர்.

கி.பி.1258 ஆம்ஆண்டு மங்கோலிய ஆக்ரமிப்போடு அப்பாஸிய பேரரசு வீழ்ச்சி அடைந்தது.

அப்பாஸிய பேரரசு பாக்தாத்தை தலைநகராக கொண்டு இயங்கினாலும் பல பகுதிகளில் ஏராளமான சிற்றரசுகள் தோன்றி அந்தந்த பிரதேசங்களை ஆட்சிசெய்தன.

அதனை அப்பாஸிய மன்னர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிற்கால அப்பாஸிய மன்னர்கள் மிகவும் பலவீனமான வர்களாக இருந்தார்கள்.

அப்பாஸிய மன்னர்களின் ஆடம்பர சொகுசு வாழ்க்கை, அந்தப்புறங்களிலே மயங்கி கிடந்தது,

பதவிப் போட்டிகள், கவர்னர்கள் ஆதிக்கம், அப்பாஸிய அரசர்கள் வாரிவழங்கிய பல பட்டங்கள், பட்டம் பெற்றவர்களின் அதிகார தலையீடுகள், வாரிசுரிமை போட்டிகள்,

துருக்கிய செல்வாக்கு, சிலுவை யுத்தங்கள், இறுதியில் மங்கோலிய படை எடுப்பு என பல அரசியல் காரணங்கள், அப்பாஸிய பேரரசை வீழ்த்தின.

மத பின்பற்றலில் சுன்னத்து வல் ஜமாஅத்,சியாக்கள், முஃதஸிலாக்கள், குவாரிஜிமிகள், என பல கொள்கை குழப்பங்களால் மக்கள் முரண்பட்டு ஒற்றுமை இல்லாமல் இருந்தனர்.

அப்பாஸியர்கள் இன ரீதியாக வட அரேபியர்கள், தென் அரேபியர்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள்,என பிளவுபட்டு இருந்தனர்.

பொருளாதார ரீதியாக வறட்சி,பஞ்சம், கடுமையான வெள்ளம்,தொற்றுநோய்கள் போன்றவற்றால் மக்கள் மிகவும் நலிவடைந்தனர்.

வணிகம், விவசாயம், கைத்தொழில்கள் ஆகியவைகளும் நலிவடைந்தன. அதிகப்படியான வரிகள் மக்களை சோர்வடைய வைத்தன.

இதுபோன்ற பலகாரணங்களின் தொகுப்பும் இறுதியாக அப்பாஸிய பேரரசர் மங்கோலியர்களால் கொல்லப்பட்டதோடு அப்பாஸிய பேரரசு வீழ்ச்சி அடைந்தது.

பாக்தாத்தில் மங்கோலியர்களின் கொடுமைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களில் ஒரு குழுவினரே மிகக்குறைந்த ஆண்டுகளில் மிகப்பெரிய பேரரசான “உஸ்மானியா பேரரசை” கட்டமைத்தனர்.

உஸ்மானிய பேரரசின் வரலாற்றை மூன்றாவது பகுதியாக தொடர்ந்து நாளை முதல் ஆராய்வோம்..!

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!