கீழக்கரையில் ‘ரூபெல்லா தடுப்பூசி’ விழிப்புணர்வு – அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டனர்

கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி குறித்த பீதிகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தை கள், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. பெற்றோர் அச்சமடைந்துள்ளதால் வதந்திகளால் அவர்கள் ஒப்புதல் பெற்ற பின்பே, தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இது சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பள்ளிகூடங்களில் நடத்தப்பட்டு மருத்துவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பயத்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே கீழக்கரை நகரில் இத்தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் தட்டம்மை தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை தீவிரப்படுத்தும் வகையில் கீழக்கரை நகராட்சி, தாலுகா, அரசு மருத்துவமனை அலுவலர்களின் பிள்ளைகள் உள்பட 35 க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு நேற்று 23.02.17 மலேரியா கிளினிக் வளாகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதலாவதாக கீழக்கரை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தியின் பிள்ளைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து அரசு மருத்துவர். ராசிக்தீன் கூறுகையில், ”ரூபெல்லா தடுப்பூசி மருந்தால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ரூபெல்லா நோய், அம்மை நோய்களில் ஒரு வகைதான். இந்நோயால் இந்தியாவில் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறப்பதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரூபெல்லா தடுப்பூசி ஒன்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டதல்ல. கடந்த 1985-ம் ஆண்டில் இருந்தே இத்தடுப்பூசி உள்ளது. 30 ஆண்டுகளாக இந்த தடுப்பூசியால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது கொஞ்சம் மேம்பட்ட வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே நம் பகுதி பெற்றோர்கள் இந்த தடுப்பூசியை தங்கள் பிள்ளைகளுக்கு போட்டுக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.