கீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் – பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம்

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே இருக்கும் ஐசிஐசிஐ ATM ல் நேற்று 24.04.17 இரவு ரூ.10000 ஐ கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதனை நேர்மையுடன் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை சந்தித்து ஒப்படைத்துள்ளார்.

கீழக்கரை ஆடறுத்தான் தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் சாதீக் அலி. இவர் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCA., பட்டப்படிப்பு படித்துள்ளார். பட்டப்படிப்பு படித்த நிலையிலும் வேலை கிடைக்கும் வரை கீழக்கரையில் வாடகை ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் கடைத்தெரு பகுதியில் இரண்டு பெண்களை ஆட்டோவில் ஏற்றி வரும் போது அந்த பெண்களில் ஒருவர் வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் ICICI ATM இயந்திரம் வேலை செய்கின்றதா..? என பார்த்து வரும் படி கூறியுள்ளார்.

பார்ப்பதற்காக சாதீக் அலி உள்ளே சென்ற போது ATM இயந்திரத்தின் பணம் வரும் பகுதியில் 5 இரண்டாயிரம் தாள்கள் இருப்பதை கண்டார். பணம் ரூபாய் 10,000/= எடுத்த சாதீக் அலி பணத்தை யாரும் கேட்டு வருகின்றார்களா..? என்று எதிர் பார்த்தார். பணத்தை தேடி வரவில்லை.

இது சம்பந்தமாக தனது உறவினரான முன்னால் நகர் மன்ற உறுப்பினர் முகைதீன் இப்ராகீமை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டார். அவர் ஆலோசனை படி இன்று ICICI வங்கி கீழக்கரை கிளைக்கு நேரில் சென்று வங்கி மேலாளர் முகம்மது சபி முன்னிலையில் ரூபாய் 10,000/= வங்கியில் ஒப்படைத்தனர்.

ஆட்டோ டிரைவர் சாதிக் அலியின் நேர்மையை, வங்கியின் ஊழியர்களும், அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். நேற்று 24.04.17 இரவு ICICI வங்கியின் ATM ல் பணம் எடுக்க சென்றவர்கள், எவரேனும் பணத்தை எடுக்காமல் தவறவிட்டு இருந்தால், உடனடியாக கீழக்கரை ICICI வங்கி கிளையை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை அளித்து பெற்று கொள்ளலாம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

  1. நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த இளைஞரின் செய்தியை வெளியிட்ட கீழை நியூஸ் இணைய தள பக்கத்தினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்

Comments are closed.