
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் இரண்டு துணை மின் நிலையங்கள் உள்ளன.இவற்றின் மூலமாக வாடிப்பட்டி மாநகர் மற்றும் சோழவந்தான் மாநகர் அதைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இந்த இரண்டு மின்நிலையங்கள் மூலம் தான் மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின் உபயோகிப்பாளர்கள் அதற்கான கட்டணத்தை மின் வாரிய அலுவலகத்தில் கட்டி வந்தனர். ஆனால் கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆக மின்வாரிய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் சர்வர் வேலை செய்யவில்லை எனக் கூறி மின் கட்டணம் கட்ட வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது . இதன் காரணமாக பகுதி வாழ் மக்கள் மின் கட்டணத்தை தனியார் சேவை மையங்களை தேடிச்சென்று கட்ட வேண்டியுள்ளது. இதைவிட பெரும் துயரம் கடந்த நான்கு மாதங்களாக மின் உபயோகித்து கட்டணங்களை மக்கள் கட்டுவதற்கு ஏதுவாக மின் கணக்கீடு செய்யாமல் நிறுத்தப்பட்டு தற்பொழுது நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சாதாரணமாக நூறு ரூபாய்க்கும் குறைவான மின் கட்டணம் கட்டி வந்தவர்கள் கூட இந்த மாதம் 600 ரூபாய்க்கு மேல் கட்ட வேண்டும். தேர்தலின்போது திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 2 மாதங்களுக்கு ஒரு முறை என இருந்த மின் கட்டண கணக்கீடு ஒரு மாதத்திற்கு ஒருமுறை என மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் ஆட்சியில் அமர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகும் கூட மின் கணக்கீடு முறையை மாற்றி அமைக்காமல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு எடுத்து மக்களை மின்வாரியம் வாட்டி வதைக்கிறது. இதுதான் இப்படி என்றால் கடந்த 20 நாட்களாக எந்த நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எந்த நேரத்தில் இணைப்பு வழங்கப்படும் என இப்பகுதி மக்களும் அரசு அலுவலகங்களும், வங்கிகளும், தனியார் நிறுவனங்களும், கடை நிர்வனங்களும் தவியாய் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு என்ன காரணம் என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. மின்வாரியம் ஏதாவது ஒரு வழியில் தொல்லை கொடுத்தால் அதை இப்பகுதி மக்கள் ஓரளவாவது தாங்கிக் கொள்ளலாம். ஆனால் மின்வாரியம் சமீபகாலமாக மின் நுகர்வோர் மீது எட்டு திசைகளிலும் இருந்து தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மின்வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்களை இந்த இடர்பாடுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.