Home செய்திகள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாருடன் கூட்டணி என அறிவிப்போம் : தூத்துக்குடியில் G. K. வாசன் பேச்சு..

தேர்தல் நெருங்கும் நேரத்தில் யாருடன் கூட்டணி என அறிவிப்போம் : தூத்துக்குடியில் G. K. வாசன் பேச்சு..

by ஆசிரியர்

தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம் என தூத்துக்குடியில் G. K. வாசன் கூறினார்.

தூத்துக்குடியில் நேற்று( 09.02.2019) S D R பள்ளியில் மறைந்த தொழிலதிபர் எஸ்.டி.தர்மராஜ்நாடாரின் தந்தையார் சாமுவேல்நாடாரின் வெங்கலத்திலான உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது, த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் சிலையை திறந்து வைத்தார். பள்ளியின் தாளாளரும் தூத்துக்குடி தெற்க்கு மாவட்ட த.மா.க தலைவருமான எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாசன் ‘’எங்கள் கட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாவட்ட தலைவர் எஸ்.டி ஆர்.விஜயசீலனுடை தாத்தா சாமுவேல்நாடாரின் வெங்கல சிலையை திறந்திருக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கியவர் தர்மராஜ்நாடார் என்பதை நான் நன்கு அறிவேன்.

அவருடைய தந்தையார் சாமுவேல்நாடார் இலங்கையிலே பல தொழில்கள் செய்தவர். அவர் சென்னைக்கு வந்து அங்கேயும் தொழில்களை செய்திருந்தால் அவர் பெரிய தொழிலதிபர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வந்து விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், விவசாயத்தை வளர்க்கும் வகையில், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் கொடுக்கிற வகையில் வாழ்ந்து காண்பித்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு வகையில் படிப்படியாக முன்னேறி வருகிறது. அதேநேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் 1940 களிலேயே இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அப்படி அன்றே அடித்தளம் அமைத்த பெரியவர்களில் இந்த சாமுவேல்நாடாரும் ஒருவர்.

அவரது பேரன்களான எஸ்.டி.ஆர்.விஜயசீலன், எஸ்.டி.ஆர்.பொன்சீலன், எஸ்.டி.ஆர். சியாம் ஆகியோர் இணைந்து தங்களது கல்வி நிலயத்தில் சிலை நிறுவியிருக்கிறார்கள். இது அவரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் இவர்களின் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கும் உதவும். அது ஞாபகார்த்தமான அடித்தளமான வகையில் இந்த சிலை அமைந்திருக்கிறது என்பதை சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற நல்ல மனிதர்களின் சிலையை திறப்பதிலே நான் பெருமை அடைகிறேன்.’’

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது நிலைப்பாடை அறிவிக்கும். கட்சி தொடங்கிய 4 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. தொண்டர்களின் எண்ணப்படி கூட்டணி அமையும், மக்களின் உணர்வுகளை த மா க பூர்த்தி செய்து வருகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தற்போது வெளிவரும் கூட்டணி குறித்த செய்திகள் அனைத்தும் ஹேஸ்யமும், ஜோதிடமும் போல தான்.

தமிழகஅரசு பட்ஜெட்டை வரவேற்க அதிக காரணங்கள் உள்ளது . விவசாயம், கல்வி, வேலை வாய்ப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது வரவேற்கதக்கது. விவசாயிகளின் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கல்வி துறைக்கும் அதிக நிதி தேவை. சிவகாசியில் பட்டாசு தொழில் நலிந்து வருகிறது. அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு நல்ல செய்தி தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் வெறும் பூங்காக்கள் மட்டும் அமைந்து வருகிறது. மக்களின் அடிப்படை வசதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். தூத்துக்குடியின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க விவிடி சிக்னல் மேம்பாலம் கட்ட வேண்டும்.

பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்ற வேண்டும். சாத்தான்குளத்தில் புதிய பணிமணை திறக்க வேண்டும். விளைநிலங்களில் காற்றாலை அமைக்க கூடாது. சுதந்தர போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமாகா சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்”. என பேசினார்

பின்னர் பள்ளியில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் வாசன் கலந்து கொண்டார். மாணவ, மாணவியரின் கலை நிகச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்எல்ஏ., கீதாஜீவன், எஸ்டிஆர் விஜயசீலன், பொன்சீலன், சாமுவேல், இரா.ஹென்றி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: அஹமத்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com