Home செய்திகள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை..

by Abubakker Sithik

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்திற்கான விருது; ஒன்றிய அரசின் காயகல்ப் மதிப்பீட்டில் முதலிடம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காயகல்ப் விருதில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 2023 24 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வழங்கும் மாநில அளவிலான அனைத்து மருத்துவமனைகளின் காயகல்ப் மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று ரூபாய் 50 லட்சத்திற்கான விருதினை தட்டிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசானது மாநில அளவில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வுக் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து ஆண்டுதோறும் காயகல்ப் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. ஆண்டு தோறும் மாநில அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுத்தம், சுகாதாரம் மற்றும் நோய் தொற்று கிருமிகள் பரவுதலை தடுக்கும் வழிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை காயகல்ப் திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்து, சிறந்த முறையில் பின்பற்றும் மருத்துவமனைக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான காயகல்ப் மாநில அளவிலான மதிப்பீடு ஆய்வு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கடந்த ஜனவரி மாதம் 19 மற்றும் 20ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த ஆய்வினை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாவேந்தன் மற்றும் ஈரோடு அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலியர் குமாரசுவாமி இருவரும் இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொண்டனர். 35 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கலந்து கொண்ட இம்மதிப்பீட்டு போட்டியில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 92.57 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்று ரூபாய் 50 லட்சம் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.

இது குறித்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும் போது, இந்த விருதின் வெற்றி தன்னலமற்று கடினமாக உழைத்த அனைத்து பணியாளர்கள், QPMS பணியாளர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நட்புணர்கள்,, நுண் கதிவீச்சாளர்கள், மருத்துவர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு முயற்சியின் பலனாகும். தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் படி , மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா ஆலோசனைபடியும் செயல்பட்டு இந்த விருதினை பெற்றுள்ளோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த விருதினை பெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும், முக்கியமாக மாநில NQAS திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக் மருத்துவர் பாவேந்தன், மருத்துவர் ரியாஸ் மற்றும் சுகுணா ஆகியோருக்கு நன்றிகளை கூறிக் கொண்டார்.

இணை இயக்குனர் நலப்பணிகள் பிரேமலதா கூறும் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையிலான, அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் அடங்கிய குழுவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என குறிப்பிட்டதுடன், அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை கூறிக்கொண்டார். மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வ பாலா, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் எஸ்.எஸ் ராஜேஷ் ஆகியோரின் தலைமையிலான தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும், மருத்துவமனை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க ஒத்துழைக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!