![IMG-20170329-WA0067[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170329-WA00671.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரை தாலுகா அலுவலம் வந்து செல்வதற்கு பேருந்து வசதி செய்து தரப்படாததால் எக்கக்குடி பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நேரடி பஸ் வசதி இல்லாததால் பெண்களும், முதியவர்களும் கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர்.
கீழக்கரைக்கும் எக்ககுடி கிராமத்திற்கும் இடையே நேரடி பேருந்து வசதியினை உடனடியாக ஏற்படுத்த கோரி எக்ககுடி கிராம பொதுக்கள் சார்பாக எக்ககுடி ஜமாஅத் நிர்வாகிகள் முஹம்மது சிராஜுதீன், அஸ்கர் அலி ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து எக்ககுடி ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் முஹம்மது சிராஜுதீன் கூறுகையில் ”எக்ககுடி கிராமத்தில் இருந்து கீழக்கரை தாலுகாவிற்கு அரசு அலுவலக வேலைகளுக்காக தினமும் பலர் வந்து செல்கின்றனர். தற்போது இரண்டு பஸ் மாறி சென்று வர வேண்டியுள்ளது மேலும் பேருந்து நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்து கீழக்கரை தாலுகா வர வேண்டியுள்ளது.
நேரடி பஸ் வசதி இருந்தால் எங்கள் கிராம பொதுமக்களின் கஷ்டங்கள் வெகுவாக குறையும். மேலும் எக்ககுடி, கொத்தங்குளம், நல்லாங்குடி, களரி, மேலமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உத்திரகோசமங்கை பள்ளியில் படிக்கின்றனர். இந்த நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாது இந்த பகுதியில் இருந்து கீழக்கரை முகம்மது சதக் கல்வி நிலையங்களில் படிக்கும் கல்லூரி மாணவ மாணவிகளும் பயன்பெறுவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவை நேரடியாக சந்தித்து எங்களின் கோரிக்கையை வைத்திருக்கிறோம். விரைவில் நேரடி பஸ் வசதி செய்து தர முயற்சிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.” என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment.