Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்க கிராமமாக வேளானூர் தேர்வு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்க கிராமமாக வேளானூர் தேர்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கீழக்கரை அருகே வேளானூரில் மனித நேய வார நிறைவு விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.  அவர் பேசுகையில்: தீண்டாமை ஒழித்தல், சாதி, மத வேறுபாடுகளை களைவதை வலியுறுத்தி மனித நேய வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2017-18ம் ஆண்டில் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்க கிராமமாக வேளானூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளானூர் கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மனிதநேயம் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்க வேண்டிய  அடிப்படை குணமாகும். சக மனிதரிடத்தில் சாதி, மத ரீதியாக பேதம் பாராமல் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  தீண்டாமை போன்ற நடைமுறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு மக்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்ய வசதியாக மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை தேவைகளான தெரு விளக்கு, சாலை, குடிநீர் வசதி, குப்பை மற்றும் கழிவுகளை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் முழு கவனத்துடன் பணியாற்ற அலுவலர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளானூர் கிராம மக்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி மாநில அளவில் முன்னோடி கிராமாக திகழும் வகையில் சுகாதார கிராமமாக உருவாக முனைப்புடன் செயல்பட  வேண்டும். இவ்வாறு பேசினார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் வேளானூர் கிராம மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மனித நேய வார விழாவை முன்னிட்டு நடந்த பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்  என்.சுகிபிரேமலா, காவல் துணைக்கண்காணிப்பாளர் (மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி)  ஏ.பிலிப் பிராங்ளின் கென்னடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தனி வட்டாட்சியர்கள் பி.ராஜகுரு. எம்.மாரி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!