“ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் உளுந்து பாசிப்பயறு ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யலாம்” : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி..

தூத்துக்குடி மாவட்ட உளுந்து, பாசிப்பயறு, சாகுபடி செய்யும் விவசாயிகளின் விளைபொருட்களை அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்திட திட்டமிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாய பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக 2017 -18 ஆம் ஆண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த உளுந்து பாசிப் பயறு போன்ற பயறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தது

இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு வெளிமார்க்கெட்டில் இத்தகைய பயறு வகைகளின் சந்தை விலை உயர்ந்ததால் அனைத்து பயறு விவசாயிகளுக்கும் நல்ல இலாபகரமான விலை கிடைத்தது.

இதேபோல் நடப்பு 2018-19 ஆம் ஆண்டு ராபி பருவத்திலும் பயறுவகை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயறு வகைகளை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-

நடப்பு ராபி பருவத்தில் இத்தகைய உளுந்து ,பாசிப்பயறு, சாகுபடி செய்யும் விவசாயிகளிடமிருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 7200 மெட்ரிக் டன் உளுந்து ,5050 மெட்ரிக் டன் பாசிப்பயறு ஆகிய பயறு வகைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூபாய் 56.00 என்ற விலையிலும் பாசிப்பயிறு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 69.50 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்பட்டு,விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதற்கான தொகையை நேரடியாக வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியன கீழ்காணும் 8 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் ,மே 1ம் தேதி முடிய கொள்முதல் செய்யப்படும்

தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், புதூர், கழுகுமலை, விளாத்திகுளம், எட்டையாபுரம், கடம்பூர் ஆகிய இடங்களில் கொள்முதல் செய்யப்படும். திருநெல்வேலி விற்பனைக் குழு முதன்மை கொள்முதல் முகமையாகவும், தமிழ்நாடு மாநில விற்பனை வாரியம் மாநில அளவிலான முகமையாகவும் செயல்படும்.

உளுந்து பாசிப்பயறு ஆகியன நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்வது அவசியம் ஆகும். அதாவது விளைபொருட்களின் எடையில் அயல் பொருட்கள் அதிக பட்சம் 2 சதவிகிதம் முதல் 3 சதவிகிதமும் ,

கலப்பினம் 3 சதவிகிதமும்,சேதமடைந்த பயறுகள் 3 சதவிகிதமும், ,குறைவாக சேதமடைந்த பயறுகள் 4 சதவீதமும், முதிர்ச்சி அடையாத பயறுகள் 3 சதவிகிதமும், வண்டுகள் தாக்கிய பயறுகள் 4 சதவிகிதமும், மட்டுமே இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்

ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்கும் வகையில் பயிர் வகைகளை நன்கு உலர வைக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நில சிட்டா, அடங்கள், ஆதார் அட்டை, மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகிப் பதிவு செய்துகொள்ள வேண்டும்

பயறுவகை விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து பயறு வகை விவசாயப் பெருமக்களும் பயன் பெற வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.