கீழக்கரையில் ‘பீச் வாலிபால்’ விளையாட்டில் அசத்தும் பள்ளி சிறுவர்கள் – வருங்கால சாதனை விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து

கீழக்கரை பகுதிகளில் பெரும்பாலான சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு செல்லும் போது உங்கள் பிள்ளைகள் எங்கே என நாம் கேட்டால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான், கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கராத்தே, குங்க்பூ பயிற்சியில் எதிரியை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான் என்று அதிர்ச்சி பதில் தருகின்றனர்.

இவையெல்லாம் எந்த மைதானத்தில் நடக்கிறது..? என்று கேட்டால் அவர்கள் தரும் பதில் நம்மை கதிகலங்க வைக்கிறது. இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் பிள்ளைகள் விளையாடி மகிழ்வது வீட்டுக்குள்ளே.. மூலையில் அமர்ந்து, வீடியோ கேம் மற்றும் செல் போன்களின் மூலம் தான் என்பது பேரதிர்ச்சி. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு பெற்றோர்களும் ஆளாவதுடன் பள்ளி கூடங்களில் பிள்ளளைகளின் படிப்பின் மீதான ஆர்வமும் குறைந்து விடுகிறது.

சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கான ஆர்வங்களை புரிந்து கொண்டு, அவர்களுக்கான விளையாட்டு தளங்களை அமைத்து தர பெற்றோர்களும், கல்வி நிலையங்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் மாற்றமாக தற்போது பள்ளி சிறுவர்கள் வீடியோ கேம் வகையறாக்களின் இருந்து கொஞ்சம் விடுபட்டு தங்கள் கவனத்தை மைதான விளையாட்டுகளின் பக்கமும் திருப்பி இருக்கின்றனர் என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.

அதே போல் கீழக்கரை நகரில் தற்போது பல்வேறு தெருக்களிலும் வாலிபால் விளையாட்டினை ஊக்குவிப்பதற்காக பல்வேறு ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் துவங்கப்பட்டு அதன் மூலம் கீழக்கரை நகரை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து கோப்பைகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடி வருகின்றனர் என்பதும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.

கீழக்கரை கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் தற்போது பள்ளி மாணவர்களால் தினமும் பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சிறுவர்கள் இங்கு வந்து விளையாடுகின்றனர். கைதேர்ந்த விளையாட்டு வீரர்களை போல இவர்கள் ஆடும் இலாவகமாக ஆட்டத்தை காண தினமும் இங்கு வரும் தொடர் ரசிகர்களும் ஏராளம்.

1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த பீச் வாலிபால் தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவயது விளையாட்டு வீரர்களை சாதனையாளர்களாக மாற்ற தகுந்த பயிற்சியாளர்களை கொண்டு மெருகேற்றினால் ஒலிம்பிக்கிலும், நம் கீழக்கரையான் கோப்பை வெல்லும் காலம் தூரமில்லை.