கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடைகளுக்கு ஒளிரும் பெயிண்ட் – தொடர் முயற்சி எடுத்த ‘இஸ்லாமிய கல்வி சங்கம்’

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை துறையினரால் செப்பனிடும் போது தேவையான பல இடங்களில் வேகத் தடை அமைக்காமலும், கரீம் ஸ்டோர் அருகாமை, நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி சமீபம் மற்றும் முக்கு ரோடு நுழைவு பகுதிகளில் அமைத்த வேகத் தடைகள் மீது ஒளிரும் பெயிண்ட் அடிக்காமலும் விடுபட்டிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் வேகத் தடை இருப்பது தெரியாமல் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கினர். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் விபத்துக்களை தவிர்க்கும் முகமாக தங்கள் சொந்த செலவில் வேகத் தடைகள் மீது பெயிண்ட் செய்தனர்.

அதே வேளையில் எந்நேரமும் வாகனப் போக்குவரத்து நிறைந்த நகரின் இந்த பிரதான சாலையில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வேகத் தடைகளின் மீது ஒளிரும் பெயிண்ட் அடிக்க கோரியும், தேவையான இடங்களில் வேகத் தடை அமைக்க கோரியும் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையிட்டு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது நெடுஞ்சாலை துறையினர் வேகத் தடைகளின் மீது ஒளிரும் பெயிண்ட் பூசி வருகின்றனர். அதே போல் சாலையின் இரு ஓரங்களிலும் ஒளிரும் பெயிண்ட் பூசப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.