கீழக்கரையில் இருந்து கவிதை வடிவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் பட்டதாரி பெண்மணி..

கீழக்கரையில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பருத்திக்காரத் தெருவை சேர்ந்த வணிக மேலாண்மை பட்டதாரி பஹ்ஜத் சாலிஹ் கவிதை வடிவில் எழுதி முக நூலில் பதிந்துள்ளார். அதில் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தொன்று தொட்ட தமிழ் கலாச்சாரத்தினை காக்கும் விதமாகவும், உலகளாவிய அளவில் தமிழின கலாச்சார பாதுகாப்பு போராட்டத்தில் பங்கேற்று இருக்கும் இளைஞர் பட்டாளத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது

எம் தமிழின எழுச்சி

இருளில் மறைந்த தமிழகத்தை
இமய உச்சியில் ஏற்றி வைத்தது – எங்கள்
இளம் படை..

வீதிகள் தோறும் வீர நடை
பார்.. இதுவரை பார்த்திராத படை..
தமிழனின் தன்னெழுச்சியால்
தகர்க்கப்பட வேண்டும் தடை…

சமூக வலை தளங்களில் பதுங்கியிருந்த
சிங்கங்கள் எல்லாம் – சாலையில்
சங்கமித்து சரித்திரம் படைக்க…

பட்டிக்காடு தொடங்கி பட்டிணம் வரை
படர்ந்தது இந்த படை – இப்படை வெல்லும்
அரசியல் அடிப்படை சொல்லும்

காளையர்கள் கன்னியர்கள் மட்டுமின்றி
கருவிலிருக்கும் குழந்தை முதல் – கடைசி
காலத்தில் கட்டிலில் கிடக்கும் கிழவன் வரை
குரல் ஓங்கிய தமிழன எழுச்சி
இறுதியில் வெற்றி காணாது ஓயாது…

ஆங்கிலத்தில் பேசினாலும்
அயல் நாட்டில் இருந்தாலும்
உள்ளத்திலும் உணர்விலும்
உண்மை தமிழனின் ஒற்றுமையின் வேர்கள்
சரித்திரம் படைக்காமல் சாயாது….

அரசியல் வியாதிகள் ஆதரவு தருவதையும்
அரசாங்கம் அறிக்கை விடுவதையும்
நம்பி விட மாட்டோம்..
நிரந்தர ஆணை வரும் வரை
நகர்ந்து விட மாட்டோம்…

வெயில் வாட்டியும் வெந்து விடவில்லை
கடும் குளிரிலும் கலைந்து விடவில்லை
மழை பொழிவிழும் மனம் தளரவில்லை
சோதித்த போதும் சோர்ந்து விடவில்லை
சாதிக்கும் எண்ணம் சற்றும் சரியவில்லை

சீறி எழுந்த போதும் சினம் கொள்ளவில்லை
காலம் கடந்த போதிலும் கல்லெறியவில்லை
படை பலத்த போதிலும் பாதிப்பேதுமில்லை
நாளைய தலைமுறையினர் நாங்கள்
நாகரீகமாய் நடந்து கொண்டோம்

மண்ணின் மைந்தர்கள்
மன உறுதியோடு மன்றாடுகிறோம்
இது எங்கள் அந்தம் அல்ல
ஆதி என்று அசையாது நிற்கின்றோம்
விலங்கிட்டாலும் வீடு செல்ல மாட்டோம்
மெரினாவில்
விளக்கை அணைத்த போதிலும்
விடிவெள்ளியாய் மின்னுவோம்…

பகலே பாதுகாப்பில்லை
பெண்களுக்கு – ஆனால் இன்று
இருள் சூழ்ந்த இரவிலும்
இளைஞர் படை இடையிலும்
இரும்புக் கோட்டைக்குள்
இருப்பதாய் சர்வ பத்திரமாய் உணர்கிறோம்…
இளம் மங்கைகள் நாங்கள்..

சித்தெறும்பு கூட்டமென
சிதைக்க நினைத்த கயவர்களே…
சிகரமென ஓங்கி விட்டோம்…
மின்மினி என அணைக்க நினைத்தாயோ…
மின்னலென உருவெடுப்போம்

இது
மாட்டிற்காக கூடிய கூட்டமில்லை…
மாற்றத்திற்காக கூடிய கூட்டம்…

நாங்கள்
விளையாட்டுக்காக
வீதிக்கு வந்த கூட்டமல்ல – நாளைய
விடியலுக்காக வித்திட வந்த வீரர்கள்….

தமிழின கவசமாய் தன்னெழுச்சியாய்
திரண்டு விட்டோம் – இனி…..

தடைகளை தகர்த்திடுவோம்
கலாச்சாரத்தை காத்திடுவோம்
பண்பாட்டை போற்றிடுவோம்
அரசியலின் ஆழம் பார்ப்போம்
அறிவியலில் ஆர்ப்பரிப்போம்

விவசாயத்தில் வளர்ச்சி பெற்று
வறுமையை விரட்டிடுவோம்
உழவனை உலகாள வைப்போம்
இயற்கையை சுரண்டிடும்
இன்னல்கள் இடித்திடுவோம்

ஒற்றுமையால் உலகை வெல்வோம்
வெற்றிகளால் விண்ணை தொடுவோம்
தமிழனிடம் சாதி மத சண்டையில்லை
நாங்கள் சாதிக்க இனி தடையுமில்லை

தலைவனின்றி உருவானோம்
தலைவர்களாய் உருவெடுப்போம்
தன்மானத் தமிழர்களை
தன்னிகரற்ற தலைவர்களை
தரணி இனி
தலை நிமிர்ந்தே பார்க்கட்டும்..

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal

2 Comments

Comments are closed.