உசிலம்பட்டி அருகே 100நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் குறைவாக கொடுப்பதாக கூறி பணிகளை நிறுத்தி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தப்பநாயக்கணூர் கிராமம். இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100நாள் பணியாட்களை கொண்டு அந்த பகுதியில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 100நாள் பணியாட்கள் காலை 8மணிக்கு பணிகளை தொடங்குகின்றனர். தொடர்ந்து மாலை 4 மணி வரை ஓடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. ஆனால் அரசு வழங்கக்கூடிய சம்பளத்திற்கு சரியான முறையில் வேலை செய்வதாகவும், அதற்கு அதிக பட்ச ஊதியமாக 60ரூ முதல் 100ரூ வரை மட்டுமே வழங்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் 100நாள் பணியாட்களுக்கு 200ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டுமென கூறி 100நாள் பணியாட்கள் இன்று பணிகளை செய்யமால் வரத்து ஓடைகளிலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து சம்பவமறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட 100நாள் பணியாட்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அதிகபட்ச சம்பளமாக 150ரூ வழங்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் ஓடையை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

உசிலை சிந்தனியா