தென்காசி மாவட்ட கூட்டுறவு வார விழாவில் 19.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் 70-வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு 1910 பயனாளிகளுக்கு ரூ 19.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஜலாலியா மஹாலில் 70-வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.தி.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லுார்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கூட்டுறவு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டுறவு துறையைச் சார்ந்த அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் பயிர்க்கடன் குறியீடு ரூ 300 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது. அதில் நாளது தேதி வரை 12485 விவசாயிகளுக்கு 13196 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனை விவசாயிகள் தவணை தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. இக்கடன்களுக்கான 7% வட்டி செலவினத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நகைக்கடன் குறியீடாக ரூ.650 கோடி நகைக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாளது தேதி வரை 49176 நபர்களுக்கு ரூ.233.91 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நாளது தேதி வரை 453 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 18.62 கோடியும் சிறு வணிக கடனாக 71 நபர்களுக்கு ரூ.28 இலட்சம் பண்ணை சாரா கடனாக 113 நபர்களுக்கு ரூ.77 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் பேசியதாவது, தென்காசி மாவட்டத்தில், 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவுக் கடன் சங்கம், 4 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள், நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 84 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31.34 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வீட்டு அடமான கடனாக 63 நபர்களுக்கு ரூ270 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் ஆகிய பல்வேறு வகையான கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. டாப்செட்கோ கடன் குறியீடாக ரூ.1 கோடியும் டாம்கோ கடன் குறியீடாக ரூ.3 கோடியும் நிர்ணயம் செய்யப்பட்டதில் டாப்செட்கோ கடனில் ரூ 1.31 கோடியும் டாம்கோ கடனில் ரூ.1.17 கோடியும் நாளது தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத்திற்கு தேவையான அளவு இரசாயன உரங்களையும் இடு பொருட்களையும் கூட்டுறவு சங்கங்கள் வழங்கி வருகின்றன. தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட பொது சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான சேவைகள் பெற ஏதுவாக வருவாய்துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா ஆகியவை கிடைக்கும் வகையில் கிராம அளவில் 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்ளில் பொது சேவை மையங்களில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி இவ்வாண்டில் அக்டோபர் திங்கள் முடிய 50966 சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். தென்காசி மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் துவக்கப்பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அக்டோபர் திங்கள் முடிய ரூ.80.53 இலட்சம் அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.1.19 இலட்சம் நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தென்காசி மண்டலத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 321 முழுநேர நியாய விலைகடைகளும், 184 பகுதி நேர நியாய விலைகடைகளுமாக 505 கூட்டுறவு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 322370 குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 5516 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை முனைய கருவி (POS Machine) வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழக முதல்வர் அறிவிப்பிற்கிணங்க, கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாலின் சமையல் எண்ணெய் கிலோ ரூ.25-க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் மூலம் அயோடின் கலந்த அரசு உப்பு நடப்பாண்டில் அக்டோபர் திங்கள் முடிய 175 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை 20 மெட்ரிக் டன் ஊட்டி தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கடன், பயிர்க்கடன், மத்திய கால கடன், சிறு வணிக கடன் என மொத்தம் 1910 பயனாளிகளுக்கு ரூ 19.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர் செய்து வரும் ஆக்கப்பூர்வமான அனைத்து திட்டங்களும் விவசாய பெருங்குடி மக்களையும் பொதுமக்களையும் ஏழை எளிய மக்களையும் உடனடியாக சென்றடைய கூட்டுறவுச் சங்கம் பெரிதும் துணை நிற்கின்றன. மேலும் இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் சங்கத்திற்கு வருகை தரும் சங்க உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினையும் பாராட்டினையும் பெறுகின்ற வகையில் உங்களின் பணிகள் சிறப்புடன் அமைய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சங்கத்தினை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் மா.உமா மகேஸ்வரி, தென்காசி கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மதிவதனா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மகேஸ்வரி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் நகர்மன்ற துணைத் தலைவர் ம.ராசையா, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் யா.சுப்பம்மாள் பால்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சே.ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லுார் 13-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.திவான் மைதீன், தென்காசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை பதிவாளர் முதுநிலை மண்டல மேலாளர் இரா.ராஜேஷ், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்