சின்ன ஏர்வாடி மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

இராமநாதபுரம், நவ.18 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி பொதுமக்களிடம்  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், குறைகள் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் அந்தப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார்.

தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன்பெறும் வகையில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவச்சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதேபோல் மருத்துவக்குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஏர்வாடி ஊராட்சி பிச்சை மூப்பன் வலசை பகுதியில் சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஏர்வாடி மனநல காப்பக செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த், ஏர்வாடி ஊராட்சி தலைவர் செய்யது அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.