
தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் 17.11.2023 அன்று தண்ணீர் திறந்து வைத்தனர். கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேலழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 9514.70 ஏக்கர் நேரடிப் பாசன மற்றும் மறைமுகப்பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு பிசான பருவ சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 17.11.2023 முதல் 31.03.2024 வரை 138 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் மொத்தம் 1189.34 மி.க.அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர், கடையநல்லூர், இடைகால், கிளாங்காடு, கம்பநேரி கிராமம், பொய்கை, திருமலாபுரம், சேர்ந்தமரம், குலசேகரமங்கலம், வீரசிகாமணி உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறும். எதிர் வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையென்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் கேட்டு கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) அண்ணாத்துரை, உதவி செயற் பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) ராஜேந்திரன், உதவி பொறியாளர் (நீர்வளம் ஆதாரத்துறை) சரவணக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அரசு அலுவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.