ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி-தூத்துக்குடியில் பரபரப்பு..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் வகையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறவழிப் போராட்டங்களை நடத்தப்போவதாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்போவதாக ஆலை எதிர்ப்பாளர்கள் அறிவித்திருந்தனர். இதையொட்டி பண்டாரம்பட்டி, குமாரெட்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியேற்றி உள்ளனர். சில தெருக்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மாவட்ட செயலளார் ஹென்றி தாமஸ் தலைமையில் கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டமும் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்