பல்வேறு ரெயில் சேவைகள் மூலம் 2023-24-ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வே ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் விரைவு, சரக்கு, பயணிகள் ரெயில் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதன் மூலம் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.12 ஆயிரத்து 20 கோடி தெற்கு ரெயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.
இதில் பயணிகள் ரெயில் சேவை மூலம் ரூ.7 ஆயிரத்து 151 கோடியும், சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 674 கோடியும், இதர வருவாய் மூலம் ரூ. ஆயிரத்து 194 கோடியும் வசூலாகியுள்ளது. இதுதவிர, பாரத் கவுரவ் ரெயில்கள் மூலம் ரூ.34 கோடியும் வசூலாகியுள்ளது. ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் ரூ.20 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் மட்டும் தெற்கு ரெயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, திருவனந்தபுரம்-காசர்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூர், சென்னை-மைசூர் இடையே 8 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
இதேபோல, ரெயில்வே நிர்வாகம் சார்பில் அனைத்து வழித்தடமும் மின்மயமாக்கும் பணியும், தண்டவாளத்தை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை இடையில் 130 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க அனுமதி கிடைத்தது. மேலும், ஆயிரத்து 272 கி.மீ. தொலைவிலான பல்வேறு வழித்தடத்தில் ரெயிலை 110 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் 170 ரெயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.