Home செய்திகள் அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. மதம் அற்புதமானது. ஆனால், மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது!- மத்திய அரசை கடுமையாக விளாசிய கமல்ஹாசன்..

அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. மதம் அற்புதமானது. ஆனால், மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது!- மத்திய அரசை கடுமையாக விளாசிய கமல்ஹாசன்..

by ஆசிரியர்

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று, திமுக கூட்டணியில், திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், செங்கோட்டைக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் மூத்தது திருச்சியின் மலைக்கோட்டை. ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் மீது போர் தொடுத்தோ அல்லது இடம் பிடிக்கவோ வந்தவர்களை எதிர்த்து, இன்றும் பெருமையுடன் நின்று கொண்டிருக்கிறது மலைக்கோட்டை. அப்படி ஆயிரம் ஆண்டுகளாக கட்டிய கோட்டையைச் சுற்றியுள்ள நகரங்களை, தங்களது கோட்டைகளாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.

திருச்சி அமைச்சர் கே.என்.நேரு இங்கு வந்திருக்கிறார். முன்னணியில் இல்லாமல், அமைதியாகப் பின்னணியில் இருந்து செயல்படுகின்றார். வயதில் குறைந்தவர்களை முன்னிருத்தி, ஆக்கப்பூர்வமாய் உழைக்கிறார். தேசம், தேச பக்தி, அரசு ஆகியவற்றுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. தேசம் என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், அரசுகள் விமர்சனத்துக்கு உட்பட்டவை. எந்த அரசாக இருந்தாலும், விமர்சனத்தை ஏற்க வேண்டியதே அதன் தன்மை. அந்த தன்மையை இழந்தால், இடிப்பாரை அற்ற அரசாகவே இருக்கும். ஆனால், தற்போது அரசை விமர்சித்தால், அது தேசத் துரோகம் என்று சொல்கிறார்கள். தேசத்துக்கும், அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் ஊர் திருச்சி. சைவ, வைணவ, இஸ்லாமிய, சீக்கிய என பல மதங்களும் புழங்கிய ஊர் இது. தமிழ், தெலுங்கு, இந்தி, சௌராஷ்டிரா என எல்லா மொழிகளையும் சந்தோஷமாகப் பேசும் ஊர் இது. நாடு முழுவதும் மதக் கலவரங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அதை குறைவு. குறிப்பாக, திருச்சியில் அவை அறவே இல்லை என்றால் அது மிகையாகாது.

நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் பன்முகத்தன்மைதான். அது தொடர வேண்டும் என்பதற்காகவே இங்கு நான் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் புத்தகம் அரசியலமைப்புச் சட்டம். அந்தப் புத்தகம் பாதுகாக்கப்பட்டால்தான், நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று கூறும் பன்முகத்தன்மை இல்லாத அரசு ஆபத்தானது. இப்படிப்பட்ட அரசு அடுத்து அரசியலமைப்பு மற்றும் குடியரசின் மேல் கைவைக்கத் தொடங்கும். அதை விமர்சிக்க வேண்டியதும், தடுக்க வேண்டியதும் உங்கள் கடமை. இந்தக் கடமையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரிவர நிறைவேற்றினால்தான் நாடு நலமாக இருக்கும்.

நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே உங்கள் மனதில் `சீட்’ கொடுத்திருக்கிறார்கள். எனக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, வீட்டுப் பத்திரத்தை, சாவியைக் கொடுத்து அனுப்பியவர்கள் தமிழகத்தில் உண்டு. உங்கள் மனங்களில் மட்டுமல்ல, இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு. அதனால்தான், தொலைக்காட்சி மூலமாவது உங்களை அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சியில் பேசுவது, ஆயிரம் கூட்டத்தில் பேசிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தமிழகம் மற்றும் இந்தியா மீது எனக்கு உள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

அண்ணன்-தம்பியை மோதவிட்டு, வேடிக்கைப் பார்ப்பது அரசியல் தந்திரம். அதுதான் இன்று நிகழ்கிறது. பண்பாட்டுப் பிரச்சினை, மொழிப் பிரச்சினை போன்றவற்றைக் கிளப்பிவிட்டு, அரசு செய்யும் தவறுகளைப் போர்த்தும் போர்வையாக அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை எல்லாம் மக்களுக்காக சேவையாற்றவில்லை. வேறு யாரோ வேட்டை நாய்போல பயன்படுத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது. ஜிஎஸ்டியால் சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. எதையாவது செய்து, தமிழகத்தை வளைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அது இங்கு நடக்காது.

மாநில அரசை மிரட்ட ஆளுநரை அனுப்புகிறார்கள். அப்போதும் அவர்கள் விரும்பியது நடக்கவில்லை என்றால், முதல்வரைக் கைது செய்து, சிறையில் அடைக்கிறார்கள். அப்போது மற்ற முதல்வர்கள் பயப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். உண்மையில் முதல்வர்களைத் தேர்ந்தெடுப்பது மக்கள்தான். எத்தனை பேரை நீங்கள் பயமுறுத்த முடியும்? 100 கோடி பேரை பயமுறுத்துவீர்களா?

அப்படியும் அவர்களது எண்ணம் பலிக்கவில்லை என்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கைவைப்பார்கள். அதுவும் நடக்கவில்லை என்றால், வாக்குப் பெட்டியையே தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். இதெல்லாம் இன்றைய நிசர்சன சத்தியங்கள்.

ராமருக்கு கோயில் கட்டி இருக்கிறோம் என்கிறார்கள். ஆனால், ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டவில்லை. நீங்கள் வாயால் சுடும் வடைகள் எங்கள் பசியைப் போக்குவதில்லை. அப்படி வாயால் சுட்ட வடைகளில் ஒன்றுதான் எய்ம்ஸ் மருத்துவனை. அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. மதம் அற்புதமானது. ஆனால், மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது. அவற்றைக் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சொத்துகளைப் பிரிப்பதைக் காட்டிலும், அரசியல், மதத்தைப் பிரித்துப் பார்ப்பதுதான் முக்கியம். எல்லோருக்கும் எல்லா மதமும் சம்மதம்தான். ஆனால், எனக்கு எனக்கு மனிதம்தான் மதம்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள். நான் எனக்காக கேட்கவில்லை. நமக்காக கேட்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!