Home செய்திகள் தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடை மழையும், அதனை ஒட்டி உள்ள தகவல்களும்!-ஓர் முழு பார்வை..

தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடை மழையும், அதனை ஒட்டி உள்ள தகவல்களும்!-ஓர் முழு பார்வை..

by Askar

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பெய்த மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்தது. நள்ளிரவில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. அங்கு 103 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.மேலும் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீர்நிலைகள் அருகே குளிக்க செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவையிலும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளான ஊஞ்சவேலம்பட்டி, புளியம்பட்டி, ஏரிப்பட்டி, சுந்தரகவுண்டனூர், தீப்பம்பட்டி, சிஞ்சுவாடி பகுதிகளில் கனமழை கொட்டியது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. வால்பாறையில் பெய்த மழைக்கு அட்டகட்டி 16-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து சென்று பாறைகளை அப்புறப்படுத்தி குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மரங்களும் முறிந்து விழுந்தன.மலைரெயில் பாதையில் பாறை விழுந்ததால், ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டபோது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களையொட்டியுள்ள உத்திர காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக ஒடுகத்தூர் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆலங்காயத்தில் மின்னல் தாக்கி 2 பேர் காயம் அடைந்தனர்.வெள்ளக்குட்டையில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.நெல்லை, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்கிறது.இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடி ஆறு பகுதியில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவானது.தென்காசி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் சிவப்பு அலர்ட் எச்சரிக்கையும், 21,22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.குற்றால அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும்வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தேத்தாக்குடி, தோப்புத் துறை,ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் துறை அறிவிப்பு காரணமாக இன்று மீனவர்கள் 3-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில், திருப்புங்கூர், புங்கனூர், பட்டவர்த்தி, இளந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அணைக்காடு, முதல்சேரி, பள்ளிகொண்டான், சாந்தாங்காடு, கொண்டிக்குளம், அலிவலம், நடுவிக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி சிங்கலாண்டியில் வீடு ஒன்று இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தமிழகத்தில் பல இடங்களில் நீடிக்கும் கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com