வேளாண் சட்டம் அமலுக்கு வந்தால் பட்டினி சாவு உருவாகும்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில், அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் கிராம சபா கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சரவணன் வரவேற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்தும், கிராமங்களில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திருக்காது என்பதற்காக, இதுபோன்ற கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது.திமுக ஆட்சியில் ₹7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். ஆனால், தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், முதல்வர் கடன் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, இந்த ஆட்சியை நிராகரிக்கிறோம்.விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரிக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கல் நடைபெறும். பட்டினி சாவு ஏற்படும். எனவே, இந்த அரசை நிராகரிக்கிறோம். என்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி திருவேங்கடம் உட்பட மாவட்ட, ஒன்றிய ,நகர பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.