Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்.!

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்.!

by ஆசிரியர்

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை_கண்டித்து SDPI கட்சியின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் இன்று (10/12/2019) நடைபெறுகின்றது. மேலும் தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டம் மாவட்டத் தலைவர் M_I.நூர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் B.அப்துல் ஹமீது அவர்களும் மற்றும் மாவட்டம், தொகுதி, நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் உட்பட 200(இருநூற்றுக்கும்) மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் B.அப்துல் ஹமீது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிற வகையில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டுவந்து, நாட்டை மதரீதியாக பிரிக்கும் சதிச்செயலை அரங்கேற்றி வருகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது என்கிறபோது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லிம்கள் அல்லாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில் முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து மத ஒடுக்குமுறை காரணமாக இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் சொன்னார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்துக்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மட்டும் வரவில்லை. முஸ்லிம்களும் கூட வந்திருக்கிறார்கள்.

மத ஒடுக்குமுறை காரணமாக இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கான உரிமை எனில், ஜநா சபையால் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை இனம் என அடையாளப்படுத்தப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், இலங்கை சிங்கள பேரினவாதத்தால் விரட்டப்பட்ட தமிழர்களுக்கும் சட்டத்தில் வாய்ப்பளிக்காததன் மூலம் அரசின் இந்த கூற்று பொய்யானது என்பது விளங்கும். இந்நகர்வானது அனைவருக்கும் சம உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு பிரிவு 14க்கு எதிரானது.

குடியுரிமையை மத அடிப்படையில் வழங்க முடியாது. அவ்வாறு சட்டம் இயற்றுவது இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 14க்கு முரணானது. இந்த சட்டத் திருத்தங்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்பின் ஆன்மாவை தாக்குகின்றன. மத அடையாளத்தின் அடிப்படையில் மக்களை ஒதுக்கி வைக்கும் அல்லது சேர்க்கும் ஒரு நாடாக இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள் கற்பனை செய்யவில்லை என்ற உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும் .

தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்.ஆர்.சி.), முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு நீக்கத்திற்குப் பின் “குடியுரிமை திருத்த மசோதா”வின் வாயிலாக இந்திய முஸ்லிம்களை உளவியல் தாக்குலுக்கு உள்ளாக்கி, இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும் திட்டத்தோடு ஆர்.எஸ்.எஸ். கோல்வார்க்கரின் கொள்கைக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முயற்சி இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் உயிர்நாடியான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டைத் தகர்ப்பதாக அமையும்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த திருத்தத்திற்கு எதிராக குடிமை சமூகத்திலிருந்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் போராட வெளியே வர வேண்டும்.” என தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com