Home செய்திகள் ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஏர்வாடி தர்கா அருகே கோல் அளவு சொல்லும் 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முத்தரையர் நகர் செல்லம் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும் மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ளது.

20 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறியமுடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியிலுள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.கீழ் மேல் கோல் முப்பத்தாறரை, தென் கீழை கல்லுக்கு மேற்குக்கு மேல் கோல் பதின்மூன்று, தென் வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் கல்வெட்டில் உள்ளன. மற்ற அளவுகள் அழிந்துள்ளன. இதில் முப்பத்தாறரை, பதிமூன்று, அஞ்சு ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் நிலஅளவுகள் சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. தெங்கு என்பது தென்னை மரத்தையும் கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இதை கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான டீ கப் வடிவிலான ஒரு பொந்தன்புளி மரம் உள்ளது. இதை பப்பாரப்புளி என்கிறார்கள். இம்மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய இடங்களை பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள், அரேபிய வணிகர்களால் ராமநாதபுரம் பகுதிக்கு வந்துள்ளது. இம்மரத்தை இப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!