கீழக்கரையில் விற்பனைக்கு வந்திருக்கும் தித்திக்கும் புதுக்கோட்டை பலாப் பழங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப் பழம் என்றாலே அது தனி சுவை தான். பலாப் பழ பிரியர்களின் பிரத்யேக பட்டியலில் புதுக்கோட்டை பலாப் பழங்கள் மட்டுமே என்றும் முன்னிலையில் இருக்கிறது. வருடம் தோறும் புதுக்கோட்டையில் இருந்து கொண்டு வரப்படும் பலா பழங்கள், ராமநாதபுரம், கீழக்கரை, உச்சிப்புளி, மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கை காட்டி, கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் தித்திக்கும் சுவை மிகுந்த பலாப் பழங்கள் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து மினி வேன் மூலம் கீழக்கரை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும் பலாப்பழங்களை பலாப்பழ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பலாப்பழம் ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.