கீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை

கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. இதனால் இந்த பகுதி மக்கள் டெங்கு. சிக்கன் குன்யா, மலேரியா போன்ற வியாதிகளினால் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு கீழக்கரை நகராட்சி ஆணையராக இப்பொறுப்பில் இருந்த சந்திரசேகரிடம் கீழை நியூஸ் சட்டப் போராளிகள் சார்பாக நேரடியாக பேட்டி கண்டு கீழை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது நகராட்சிக்கு சொந்தமான வடக்குத் தெரு பகுதி இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என சட்டப் போராளிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வரை இந்த பகுதியில் பூங்கா அமைக்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப் கூறுகையில் ”தூய்மை இந்தியா திட்டத்தின் (2016-2017) ஒரு பகுதியான திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளின் படி வாங்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கடந்த ஓராண்டு காலமாக இந்த வடக்குத் தெரு ட்ரக் கொட்டகையில் கவிழ்ந்து கிடக்கிறது.

இதனால் மீண்டும் இந்த பகுதியில் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இந்த பகுதியினை உடனடியாக சுத்தம் செய்து சிறுவர்கள் விளையாட பூங்கா அமைத்து பராமரிக்க வேண்டும்” என நகராட்சி நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.