தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் அனைவரது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாதம் ஒருமுறை சார் ஆட்சியர் தலைமையிலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும் சிறப்பு குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் மூலமாக உத்தரவிட்டுள்ளது.
குறைதீர் கூட்டங்களை நடத்தும்பொழுது குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாய்வுதள வசதி, வீல்சேர் வசதி, மனுக்களை எழுதுவதற்கான ஏற்பாடு, பெறப்பட்ட மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவது, பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
மேலும், கூட்டம் நடைபெறும் இடம், தேதி உள்ளிட்டவற்றை பத்திரிக்கை உள்ளிட்ட ஊடகங்களில் பத்து நாட்களுக்கு முன்னரே விளம்பரப்படுத்துதல் உள்ளிட்டவையும் அதில் அடங்கும். ஆனால், மேற்கண்ட எந்த நிபந்தனைகளையும் பின்பற்றாமல் வெறுமனே மனுக்களை பெரும் முகாமாக மட்டுமே தொடர்ச்சியாக பழனி சார் ஆட்சியர் நடத்தி வருகிறார்.
மாதாந்திர குறைகேட்ப்பு கூட்டத்தை முறையாக கூட்டாமலும், ஒப்புகை சீட்டு வழங்காமலும், வீல்சேர் உள்ளிட்ட வசதிகள் செய்து தராமலும், பத்து பேரிடம் மட்டும் மனுவை பெற்றுக்கொண்டு மீதியை மற்ற அதிகாரிகளை கொண்டு பெற சொல்லிவிட்டு பாதியிலேயே முகாமை விட்டு வெளியேறுவதையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
நேற்று (09.02.19) வேடசந்தூரில் நடைபெற்ற முகாமில் சார் ஆட்சியர் பங்கேற்கவில்லை. இப்படியாக மாற்றுத் திறனாளிகளை மதிக்காமலும், தமிழக அரசின் உத்தரவுகளை பின்பற்றாமலும் மாற்றுத்திறனாளிகளை தொடர்ச்சியாக புறக்கணிக்கும் சார் ஆட்சியரை கண்டித்தும் சார் ஆட்சியர் இல்லாமல் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தும் வடமதுரை ஒன்றிய தலைவர் கருப்பையா தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் முன்னிலையில் முகாம் புறக்கணிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 70க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு கொண்டு வந்திருந்த மனுக்களை அளிக்காமல் முகாமை புறக்கணித்து வீட்டிற்கு சென்றனர். இப்போராட்டத்தின் போது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.