கீழக்கரையில் ‘ஈ’ ஆடும் இ-சேவை மையம் – தொடர் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

கீழக்கரை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்திற்கு கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வருகின்றார்கள். அவர்களுள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்காகவும் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் வாங்குவதற்காகவுமே பெரும்பாலான பொதுமக்கள் இங்கு வருகின்றனர்.

ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். இது சம்பந்தமாக இச்சேவை மையத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் காரணம் கேட்டால் அட்டை இல்லை, பதிவுசெய்யும் ரிப்பன் இல்லை என்று கடந்த நான்கு மாதங்களாக ஒரே பதிலை கூறி வருகிறார்கள்.

இது குறித்து மக்கள் குறை தீர்க்கும் நாளில் மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரிண்டர், ரிப்பன் எல்லாம் சரிசெய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போது புதிதாக மென் பொருள் சாப்ட்வேர் சரியாக வேலை செய்யவில்லை என்று பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்து வருகின்றனர். தற்போது இந்த சேவை மையத்தில் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் இ-சேவை மையம் பொதுமக்கள் வருகை இல்லாமல் ஈ ஆடுகிறது.

1 Comment

  1. S nanka Ervadi iruthu daily varam but net work problem server problem solli alaiya vitranga contact num da illa petrol selvu waste Sekuram action yedunga

Comments are closed.