நெற்கட்டும் செவலில் விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் 306-வது பிறந்த தினவிழா..

நெற்கட்டும் செவலில் விடுதலை போராட்ட வீரர் மாவீரன் பூலித்தேவன் 306-வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம்,சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் 01.09.2021 புதன் கிழமை விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் 306-வது பிறந்தநாள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் அரசு விழாவாக கொண்டாடப்படுவதையொட்டி, நெற்கட்டும் செவலில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் கி.பி 1715-ம் ஆண்டு ஆவணித் திங்கள் 16-ம் நாள் சித்திரபுத்திர தேவர், சிவஞான நாச்சியார் இருவருக்கும் மகனாகப் பிறந்தார். மாவீரன் பூலித்தேவன் அஞ்சா நெஞ்சராகவும், நிகரற்ற போர் வன்மை படைத்தவராகவும், திகழ்ந்து வந்தார். வீரமும் வலிமையும் மட்டுமின்றி அவர் நேர்மையும், பண்பும் நிறைந்தவர்.மேலும், தன்மானமும், சுதந்திர வேட்கையும் கொண்டு திகழ்ந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்றஉறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்) ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு மாவீரன் பூலித்தேவன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன்நினைவு மண்டபத்தினை பார்வையிட்டு, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இவ்விழாவில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்