Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு சிறப்பு கடனுதவி முகாம்;மாவட்ட ஆட்சியர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு சிறப்பு கடனுதவி முகாம்;மாவட்ட ஆட்சியர் தகவல்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கான சிறப்பு கடனுதவி முகாம் வருகின்ற 25.08.21 மற்றும் 26.08.21 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கடனுதவி முகாமை தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. புதிய கால கடன் பெறுபவர்கள் 30 கோடி வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். நடைமுறை மூலதனமாக ரூ.2 கோடி வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம். முதல் தலை முறை தொழில் முனைவோர்கள் ரூ.10 இலட்சத்திற்கு மேற்பட்ட ரூ.5 கோடி வரையிலான புதிய உற்பத்தி மற்றும் சேவை தொழில்திட்டங்களை 25% மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடன் பெற்று தொழில் ஆரம்பிக்க புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டப்படிப்பு பட்டயபடிப்பு அல்லது தொழிற் கல்வி (ஐ.டி.ஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். தொழில் ஆரம்பிக்க உள்ளோர் தங்களது பங்கு தொகையாக 5% மட்டுமே மூலதனமாக கொண்டு வர வேண்டும். மேலும் 25% மானிய தொகையுடன் 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.இத் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 50 இலட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் 25.08.2021 மற்றும் 26.08.2021 அன்று தென்காசியில் உள்ள மாவட்ட தொழில் மையம், திருமலைக்கோவில் சாலை, குத்துக்கல் வலசை, தென்காசி என்ற முகவரியில்தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. முகாமில் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தினையும்பெற்றுக் கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும்.NEEDS திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற தகுதியுடைய தொழில் முனைவோர்கள் விண்ணப்பங்களை www.tiic.org/application-forms-download/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவே கிளை மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்,5C,5B சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி – 627 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கங்களுக்கு 9445023492 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் விளக்கங்களைப் பெறலாம். இந்த வாய்ப்பினை தென்காசி மாவட்டத்திலுள்ள புதிய தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் சிறப்பு முகாமிற்கு வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com