பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி”; தமிழ் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் சிறப்புரையில் பேச்சு..

பொதிகைத் தமிழ்ச் சங்கம் நெல்லை அரசு அருங்காட்சியகத்தோடு இணைந்து மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்வாக வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை “இளைய தலை முறையினர் பார்வையில் மகாகவி பாரதி ” என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இளைய தலைமுறைப் பேச்சாளர் ஒருவரும்,தொடர்ந்து பிரபல பேச்சாளர் அல்லது எழுத்தாளர் ஒருவரும் உரையாற்றி வருகிறார்கள்.கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் எட்டாவது வார நிகழ்வை ஜூலை 7 மாலையில் இணையவழியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தொடக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில், இளம் பேச்சாளராக பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி மாணவர் சூர்யா உரையாற்றினார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், பாரதி தமிழை எளிமையாக்கி,பாமர மக்களின் வார்த்தைகளிலேயே பாடி பாமர மக்களிடமும் போய்ச் சேர்ந்தவன். “பெண் விடுதலைக்கு வித்திட்டவன் பாரதி” பெண்கள் சமத்துவம் பெற்று உயர வேண்டும் என்பது பாரதியின் பெரும் கனவாக இருந்தது. அவன் கண்ட கனவு நனவாகியிருக்கிறது. பெண்களாகிய நாங்கள் முன்னேறியிருக்கிறோம்.ஒரு நாளேனும் பாரதி உயிர்பெற்று வரணும். பெண்கள் முன்னேறியிருப்பதைப் பார்த்து பாரதி சந்தோசப்படணும் “…என்று தன் உரையில் தெரிவித்தார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு படை காவல்துறைத் தலைவர் முனைவர் முருகன் இ.கா.ப.,கட்டுரையாளர் முனைவர் வெ.இன்சுவை, உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்க பொதுச் செயலாளர் உதயம்ராம்,எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன், தென்காசி டாக்டர் தங்கப் பாண்டியன்,பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இந்துபாலா,ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முனைவர் பழனிச்சாமி,கவிஞர் பாப்பாக்குடி முருகன்,ஈரோடு சுதா நுதல்விழி உட்பட பல கல்லூரி மாணவ மாணவியர்,பொதிகை தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாரதி அன்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..