Home செய்திகள் கடையநல்லூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழு நேரில் ஆய்வு; தினசரி சந்தை தொடர்பான மனு மீது நடவடிக்கை..

கடையநல்லூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழு நேரில் ஆய்வு; தினசரி சந்தை தொடர்பான மனு மீது நடவடிக்கை..

by mohan

கடையநல்லூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழு நேரில் வந்து ஆய்வு செய்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தினசரி மார்க்கெட் தொடர்பாக சமூக ஆர்வலர் குறிச்சி சுலைமான் என்பவர் சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சட்டமன்ற மனுக்கள் குழு கடையநல்லூர் பகுதியில் ஆய்வு செய்தது. அவர் அனுப்பிய மனுவில் தெரிவித்ததாவது: கடையநல்லூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் முப்புடாதி அம்மன் கோவில் தெரு பாப்பன் கால்வாய் ஓடை அருகே வட பகுதியில் உள்ளது. இங்கு 32 சில்லரை கடைகள் உள்ளது நகராட்சி சார்பில் அந்த கடைகள் அனைத்தும் சில்லறை வியாபாரத்திற்கு குத்தகை முறையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் வாடகைக்கு எடுத்தவர்கள் அந்த கடைகளை பயன்படுத்தாமல் அம்பேத்கர் தெரு மற்றும் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வடபுறம், கீழ்புறம் முழுமையான கட்டிடம் கட்டி அம்பேத்கர்தெரு பொதுமக்கள் செல்லும் தெருக்களை சுமார் 8 அடி நீளத்திற்கு இரு புறமும் கூடைகள் காய்கறிகள் என வைத்து ஆக்கிரமிப்பு செய்து காலை நேரத்தில் மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் 17வது வார்டு நகரின் மையப்பகுதி ஆகும் இங்கு காலை நேரத்தில் மதுரை ஒட்டச்சத்திரம் பெங்களூர் போன்ற வெளி மார்க்கெட்டில் இருந்து விற்பனைக்காக 20 லாரிகளும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை விற்பதற்கு டிராக்டர் பிக்கப் வேன், பைக் ,ஆட்டோக்களில் வருகின்றனர். அதன் பின்னர் அப்பொருள்களை சில்லரை வியாபாரம் செய்வதற்காக கடையநல்லூர் நகர் முழுவதும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சில்லறை வியாபாரிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து வாங்கி செல்வதால் அப்பகுதியில் காலை 7 மணி முதல் 10 மணி வரை முழுமையாக அம்பேத்கர் தெரு பகுதிகளுக்கு நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அப்பகுதியில் பிரபலமான மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், ஆதிதிராவிடர்கள் என 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்கள் வரமுடியவில்லை. மேலும் ஈமச்சடங்கு, திருமணம் போன்றவற்றை முப்புடாதி அம்மன் கோவில் தென்வடல் தெரு மற்றும் அம்பேத்கர் தெருவில் நடத்த முடியவில்லை. அதற்கான பந்தல் போட முடியவில்லை. மேலும் இப்பகுதியில் குடியிருப்போரில் வாகனங்களையும் இங்கே நிறுத்த முடியவில்லை வீட்டு வாசல் முன்பாக உள்ள தெருக்களில் குழந்தைகள் விளையாடக் கூட முடிவதில்லை. மேலும் இந்தப் பகுதியில் நடக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்னும் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை அகற்வில்லை. அதற்கு பதில் கண் துடைப்புக்காக திறந்த வெளியில் சாலையோரம் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்தி விட்டு ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றியதாக நகராட்சி நிர்வாகம் நீதி மன்றத்திற்கு தகவல் அளிக்கின்றது. கடந்த 20-ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நாங்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் நிர்வாகம், நகராட்சி, நீதி மன்றம் என தொடர்ந்து முறையிட்டு போராடி வருகிறோம். நிரந்தரமாக தினசரி மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்தை சுரண்டை, சாம்பவர் வடகரை, பாவூர்சத்திரம் புளியங்குடி போன்ற நகர்களில் புறநகர் பகுதிக்கு மாற்றியது போல் கடையநல்லூரில் தினசரி மொத்த மார்க்கெட்டை கொரோனா காலத்தில் எட்டு மாதம் புறநகர் பகுதியில் தனியார் சினிமா தியேட்டரில் செயல்பட்டதை போல், நிரந்தரமாக புறநகர்ப் பகுதியில் தினசரி மார்க்கெட்டை அமைக்க வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையூறாக செயல்படும் மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தேசிய நெடுஞ்சாலை அட்டை குளத்திற்கு மேல்புறம் உள்ள மந்தவெளி புறம் போக்கில் அமைத்திட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வின் போது தென்காசி மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தரராஜ், சட்டப்பேரவை செயலர் முனைவர் கி.சீனிவாசன்,எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா,நகராட்சி தலைவர் ஹபீப் அப்துல் ரகுமான், திமுக, அதிமுக கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!